அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எம்.எல்.ஏ. சாலை மறியல்
திண்டிவனம் அருகே அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எம்.எல்.ஏ. சாலை மறியலில் ஈடுபட்டார்.
திண்டிவனம்,
திண்டிவனம் தாலுகாவில் ஒலக்கூர் ஒன்றியம் உள்ளது. இந்த ஒன்றியத்தில் அரசின் திட்டப்பணிகள் குறித்தும், அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும், பணித்தள பொறுப்பாளர்களை பணி நீக்கம் செய்தது குறித்தும் கேட்பதற்காக திண்டிவனம் எம்.எல்.ஏ. அர்ஜூனன், அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றார்.
ஆனால் அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சீதாலட்சுமி இல்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்டு அ.தி.மு.க.வினர் கேட்டபோது, சிறிது நேரத்தில் வந்து விடுவதாக கூறினார்.
சாலை மறியல்
ஆனால் வெகுநேரமாகியும் அவர், அலுவலகத்திற்கு வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அர்ஜூனன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் எஸ்.பி.ராஜேந்திரன், பன்னீர், பொன்மலர் ராம்குமார், யோகநாதன், நீலமேகம் உள்பட பலர் கலந்து கொண்டு வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து கோஷமிட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் ஒலக்கூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குள் சென்றனர். பின்னர் அலுவலகத்துக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சீதாலட்சுமியிடம் அ.தி.மு.க.வினர் பல்வேறு கேள்விகளை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு சீதாலட்சுமி, இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட ஊரக பஞ்சாயத்து அலுவலரிடம் கேட்டு பதில் கூறுவதாக தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story