பால்குடம் எடுத்து பொதுமக்கள் நூதன போராட்டம்


பால்குடம் எடுத்து பொதுமக்கள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 13 July 2021 11:12 PM IST (Updated: 13 July 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

மதுரை குடிநீர் திட்டத்தை கைவிடக்கோரி கூடலூரில் பொதுமக்கள் பால்குடம் எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி : 

தேனி மாவட்டம் லோயர்கேம்பில் முல்லைப்பெரியாற்றில் தடுப்பு அணை கட்டப்பட்டு, அங்கிருந்து குழாய்கள் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் கையில் கருப்புக்கொடி கட்டி போராட்டம், தமிழக அரசுக்கு தபால் அனுப்பும் போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று கூடலூரில், முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம், முல்லைப்பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கம் மற்றும் அனைத்து சமுதாய பொதுமக்கள் சார்பில் கூடல் சுந்தரவேலவர் கோவிலுக்கு பால்குடம் எடுத்து நூதன போராட்டம் நடந்தது. 

போராட்டத்தின்போது, பொதுமக்கள் பால்குடத்துடன் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள விநாயகர்கோவிலில் தொடங்கி பழைய பஸ் நிலையம், காமாட்சியம்மன் கோவில்தெரு, பொம்மஜ்ஜி அம்மன் கோவில் தெருவழியாக கூடலூர் கூடல் சுந்தரவேலவர் கோவிலுக்கு வந்தடைந்தனர். பின்னர் அங்கு சுந்தரவேலவரிடம் குடிநீர் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வழிபாடு நடத்தினர். 


இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, இந்த போராட்டத்தின் மூலம் எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறோம். மேலும் வைகை அணையை தூர்வாரி கூடுதல் தண்ணீரை தேக்கி அங்கிருந்து மதுரைக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்ல அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.


Next Story