ஊட்டியில் இயற்கை முறையில் முட்டைகோஸ் சாகுபடி


ஊட்டியில் இயற்கை முறையில் முட்டைகோஸ் சாகுபடி
x
தினத்தந்தி 13 July 2021 11:17 PM IST (Updated: 13 July 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் இயற்கை முறையில் விவசாயிகள் முட்டைகோஸ் சாகுபடி செய்து வருகின்றனர்.

ஊட்டி

ஊட்டியில் இயற்கை முறையில் விவசாயிகள் முட்டைகோஸ் சாகுபடி செய்து வருகின்றனர்.

இயற்கை வேளாண்மை

நீலகிரி மாவட்டம் இயற்கை வேளாண்மை மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, கலெக்டர் அறிவுரைப்படி இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 

ஊட்டி வட்டாரத்தில் காய்கறி சாகுபடியை அதிகரிக்க 300 ஹெக்டர் பரப்பளவுக்கு பின்னேற்பு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் முட்டைகோஸ் விதை மற்றும் நாற்றுகளை விலைக்கு வாங்கி தங்களது நிலங்களில் பயிரிட்டு வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டை நோய் தாக்குதலால் செடிகள் வளர்ச்சி பாதிக்கப்பட்டதோடு, முட்டைகோஸ் விளைச்சல் இல்லாமல் போனது. இதை எதிர்கொள்ளும் வகையில் வீரிய ரக டெக்கில்லா முட்டைகோஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. 

நஞ்சநாடு தோட்டக்கலை பண்ணையில் இந்த ரக நாற்றுகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 5 விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் நாற்றுகள் வழங்கப்பட்டன. இந்த நாற்றுகளை விவசாயிகள் கடந்த மார்ச் மாதம் நிலங்களில் நடவு செய்தனர்.

முட்டைகோஸ் விளைச்சல்

தற்போது நோய் தாக்கம் இன்றியும், இயற்கை முறை சாகுபடியால் விளைச்சல் அதிகரித்து உள்ளது. முட்டைகோஸ் செடிகளை பூச்சி தாக்காத வண்ணம் மஞ்சள் ஒட்டு பொறி அட்டை வழங்கப்பட்டது. 

தோட்டக்கலை துறையினர் சம்பந்தப்பட்ட விளைநிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து மானியம் அடிப்படையில் நாற்றுகள் வழங்கி வருகின்றனர். இதைத்தொடர்ந்து 15 ஹெக்டர் பரப்பளவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, 5 ஹெக்டர் பரப்பளவில் வீரிய ரக டெக்கில்லா முட்டைகோஸ் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது. கொரோனா காலத்தில் 100 சதவீத மானியத்தில் நாற்றுகள் கிடைத்ததால் செலவு மிதமானது. 

மேலும் மஞ்சள் ஒட்டு பொறி அட்டை மூலம் பூச்சிகளை எளிதில் கட்டுப்படுத்த முடிவதால், மருந்து அடிப்பது குறைந்தது. தோட்டக்கலை துறை எடுத்த நடவடிக்கையாலும், முட்டைகோஸ் நல்ல விலை கிடைப்பதாலும் நஷ்டம் தவிர்க்கப்பட்டு உள்ளது என்றனர்.

Next Story