மகா சிவராத்திரிக்கு பொதுவிடுமுறை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்
குமரி மாவட்ட கோவில்களில் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மகா சிவராத்திரிக்கு பொதுவிடுமுறை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என கூறினார்.
களியக்காவிளை:
குமரி மாவட்ட கோவில்களில் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மகா சிவராத்திரிக்கு பொதுவிடுமுறை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என கூறினார்.
அமைச்சர் ஆய்வு
தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மாவட்டந்தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி குமரி மாவட்டம் வந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முக்கிய கோவில்களான பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் மற்றும் மண்டைக்காடு, சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். சாமிதோப்பு தலைமைப்பதியில் அவர் சாமி தரிசனம் செய்தார்.
நேற்று 2-வது நாளாக அவர், அமைச்சர் மனோ தங்கராஜூவுடன் சென்று ஆய்வு செய்தார். அதன்படி அவர்கள் நேற்று திக்குறிச்சி மகாதேவர் கோவில், குழித்துறையில் உள்ள அரண்மனை, நாகர்கோவில் நாகராஜா கோவில், கிருஷ்ணன் கோவில், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில், தோவாளை கிருஷ்ணசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஆய்வு செய்தனர்.
அரண்மனை
அதை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள திக்குறிச்சி மகாதேவர் கோவில் சுற்றுச்சுவர் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குழித்துறையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான 1½ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பழைய பள்ளியை மீண்டும் சீரமைத்து பொதுமக்கள் கருத்துக்கேட்டு பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். குழித்துறை மகாதேவர் ஆலயத்தின் அருகில் மன்னர் தங்கும் இடைத்தாவளம் என்றழைக்கப்படும் அரண்மனையை புனரமைத்து புராதன சின்னமாக பாதுகாக்கப்படும்.
தமிழக கோவில்களில் உள்ள யானைகளுக்கு சிறப்பான மருத்துவ பரிசோதனை, உணவு, நடை பயிற்சி அளிக்கப்படுகிறது. கோவில்களுக்கு யானைகளை வனத்துறையிடமிருந்து பெறுவதில் சட்ட சிக்கல்கள் உள்ளன.
சிவராத்திரி பொதுவிடுமுறை
மகா சிவராத்திரியில் நடைபெறும் சிவாலய ஓட்டத்திற்கு பொதுவிடுமுறை அளிப்பது குறித்து முதல்-அமைச்சரிடம் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் அரவிந்த், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன் குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பகவதி அம்மன் கோவில்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர், கோவில் தெப்பக்குளம் மற்றும் தேவசம் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். பள்ளியில் கழிவறைகள், வகுப்பறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர், பள்ளி தலைமையாசிரியையிடம் மண்டைக்காட்டில் நல்ல வசதியுடன் கூடிய பள்ளிக்கூடமும், போதிய ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகம், மைதானத்தை சுத்தமாக வைக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் என்று அறிவுரை கூறினார். மேலும், பள்ளிக்கூடத்திற்கு தேவையான உதவிகள் செய்ய அறநிலையத்துறை தயாராக உள்ளது என்றார்.
அப்போது, பெற்றோர் ஒருவர் ‘கடந்த 1985-க்கு பிறகு பள்ளிக்கூடத்திற்கு அங்கீகாரம் புதுப்பிக்கப்படவில்லை' என புகார் தெரிவித்தார்.
உடனே அமைச்சர், கலெக்டரிடம் பள்ளிக்கூட அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு நடவடிக்கை எடுங்கள் என அறிவுறுத்தினார். ஆய்வின்போது, கோவில் கண்காணிப்பாளர் சிவகுமார், மராமத்து பொறியாளர் அய்யப்பன், ஸ்ரீகாரியம் மோகன்குமார், கல்லுக்கூட்டம் பேருராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணியன் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story