ஆக்கிரமித்து கட்டப்பட்ட 9 கோவில்கள் இடித்து அகற்றம்


ஆக்கிரமித்து கட்டப்பட்ட 9 கோவில்கள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 13 July 2021 11:52 PM IST (Updated: 13 July 2021 11:52 PM IST)
t-max-icont-min-icon

கோவை முத்தண்ணன் குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 9 கோவில்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

கோவை

கோவை முத்தண்ணன் குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 9 கோவில்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

முத்தண்ணன் குளக்கரை 

கோவை மாநகர பகுதியில் உள்ள உக்கடம் பெரியகுளம், முத்தண்ணன் குளம், வாலாங்குளம், கிருஷ்ணாம்பதி குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 

இதனால் குளக்கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளக்கரையில் ஆக்கிரமித்து 2 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. 

இந்த வீடுகளில் இருந்தவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து அந்த வீடுகளுக்கு பொதுமக்கள் குடிபெயர்ந்ததும், ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. 

கோவில்களை இடிக்கும் பணி 

ஆனால் குளக்கரையில் இருந்த கோவில்கள் மட்டும் இடிக்கப் படாமல் இருந்தது. கொரோனா பரவல் குறைந்த நிலையில் ஆக்கிரமிப்பு கோவில்களை இடித்து அகற்றும் பணி தொடங்கியது. 

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவில் உள்ளே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கோவில் இடிக்கும் பணி பாதிக்கப்பட்டது. 

இந்த நிலையில்மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்தனர். அத்துடன் பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டனர். 

150 பேர் கைது 

தொடர்ந்து 3 பொக்லைன் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவிலை இடித்து அகற்றும் பணி தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்பினர் அங்கு குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

கோவில்களை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்து அப்புறப்படுத்தினர்.

9 கோவில்கள் இடிக்கப்பட்டன

இதனைத்தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த முத்து மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், கருப்பசாமி கோவில் உள்பட 9 கோவில்கள் இடித்து அகற்றப்பட்டது. 

முன்னதாக கோவில்களில் இருந்த சாமி விக்கரங்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். ஒருசில கோவில்களில் இருந்த சிலைகளை பொதுமக்களே முன்வந்து எடுத்து சென்றனர். 

பின்னர் பூஜை பொருட்கள், ஈட்டி உள்ளிட்ட வற்றை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். 


Next Story