பெரம்பலூர் ராணுவ வீரர் உடல் அடக்கம்
மேற்கு வங்க மாநிலத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
பாடாலூர்:
ராணுவ வீரர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா காரை கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 43). இவர் கடந்த 23 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஜெகதீஸ்வரி (37) என்ற மனைவியும், விஷால் (11), ரித்தியன் (7) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
சங்கரின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகாவில் உள்ள இருங்களூர் ஆகும். அவர், தனது மனைவியின் சொந்த ஊரான காரை கிராமத்தில் வீடு கட்டியுள்ளார். அங்கு ஜெகதீஸ்வரி, மகன்களுடன் வசித்து வந்தார்.
சாவு
தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் பணிபுரிந்து வந்த சங்கர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் காரை கிராமத்திற்கு வந்தார். பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் பணிக்கு திரும்பினார். அவர், கடந்த 10-ந் ேததி மேற்கு வங்க மாநிலத்தில் வடக்கு சிக்கிம்- லாட்சங் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, உயிரிழந்ததாக ராணுவ அதிகாரிகள், சங்கரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடலுக்கு அஞ்சலி
இதைத்தொடர்ந்து சங்கரின் உடல், ராணுவ நடைமுறைகள் முடிந்த பின்னர் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை சென்னைக்கு வந்தடைந்த அவருடைய உடல், அங்கிருந்து ராணுவ வாகனம் மூலம் காரை கிராமத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு நள்ளிரவில் கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக சங்கரின் உடல் வைக்கப்பட்டது. நேற்று அவருடைய உடலுக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் சங்கரின் உடலுக்கு, மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
ராணுவ மரியாதையுடன் அடக்கம்
இதைத்தொடர்ந்து நேற்று மதியம் சங்கரின் உடல், அவருடைய வீட்டில் இருந்து ராணுவ வாகனத்தில் காரை கிராமத்தில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் சங்கரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ராணுவ வீரர் சங்கர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story