தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தாமரைக்குளம்:
அரியலூர் நகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் அரியலூர் நகராட்சி ஆணையர்(பொறுப்பு) மனோகரன், துப்புரவு ஆய்வாளர் முத்துமுஹம்மது உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் அரியலூர் நகரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் கடைகளில் தடையின்றி விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் மளிகை கடைகள், டீக்கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட கடைகளில் பார்சலுக்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து பயன்படுத்துவது தெரிய வந்தால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்றும் எச்சரித்தனர். மேலும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருக்கும் என்றும், இதுபோன்ற ஆய்வுகள் அடிக்கடி நடத்தப்படும் என்றும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story