குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
சிதம்பரம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் அருகே சி.தண்டீஸ்வரம்நல்லூர் பகுதிக்குட்பட்ட ஓமகுளம், ஜமால் நகர், வடக்கு தெரு, சிவஜோதி நகர், தாயுமானவர் நகர், செல்வ கணபதி நகர், ராகவேந்திரா நகர் உள்ளிட்ட பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடிநீர் குழாய் பழுது காரணமாக இப்பகுதி மக்களுக்கு கடந்த 6 மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர். இது குறித்து புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலிகுடங்களுடன் அங்குள்ள சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்று கோரி கோஷங்களை எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இது குறித்த தகவலின் பேரில் சிதம்பரம் தாசில்தார் ஆனந்த், குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் ராஜ், சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது 20 நாட்களுக்குள் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story