வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
பண்ருட்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுப்பேட்டை,
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூர் சோதனை சாவடியில் புதுப்பேட்டை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேனில் கடத்தி வந்த தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வீரப்பெருமாநல்லூரை சேர்ந்த ஜெயபால் (வயது 45), புதுப்பேட்டையை சேர்ந்த சங்கர் (40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவர்கள் அளித்த தகவலின் பேரில் ஜெயபால் வசித்து வரும் வாடகை வீட்டில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
ரூ.10 லட்சம்
அப்போது அங்கு 50-க்கும் மேற்பட்ட சாக்குப்பையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதனை புதுப்பேட்டை பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்ததும் தெரிந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து ஜெயபால் மற்றும் சங்கரிடம் வேறு எங்காவது புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்துள்ளார்களா என போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story