கிருஷ்ணராயபுரம் அருகே தூக்குப்போட்டு மனைவி தற்கொலை மதுபோதையில் கணவர் தூங்கியதால் பரபரப்பு
கிருஷ்ணராயபுரம் அருகே தூக்குப்போட்டு மனைவி தற்கொலை செய்து கொண்டது கூட தெரியாமல் மதுபோதையில் கணவர் தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீ்ஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கிருஷ்ணராயபுரம்,
காதல் மனைவி தற்கொலை
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரை சேர்ந்த தனசேகரன் (வயது 34) என்பவர் மாயனூரைச் சேர்ந்த மாலதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஆசித் என்ற ஒரு மகன் உள்ளான். தனசேகரன் வேலூர் மாவட்டத்தில் உள்ள குடிபோதை மறுவாழ்வு மையத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இதன் காரணமாக கரூர் மாவட்டம் மாயனூர் காசா காலனியில் உள்ள தாய் வீட்டில் மகனுடன் மாலதி வசித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியை பார்க்க வந்த தனசேகரன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தூங்க சென்றனர். அப்போது நள்ளிரவு எழுந்த மாலதி, வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுபோதையில் தூக்கம்
தனது அம்மா தூக்கில் தொங்கியதை பார்த்த மகன் ஆசித் தந்தையை எழுப்பியுள்ளான். அப்போது தனசேகரன் எழுந்து மின் விசிறியில் தொங்கிய மனைவியை கீழே இறக்கி வைத்து விட்டு மீண்டும் போதையில் தூங்கியதாக தெரிகிறது. இதனை அருகில் உள்ளவர்கள் பார்த்து மாயனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாலதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்தது கூட தெரியாமல் அவரது உடல் அருகிலேயே கணவர் மதுபோதையில் தூங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story