மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவட்டத்தில், 19 இடங்களில் எடியூரப்பா உருவ பொம்மை எரிப்பு காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 78 பேர் கைது


மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவட்டத்தில், 19 இடங்களில் எடியூரப்பா உருவ பொம்மை எரிப்பு காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 78 பேர் கைது
x
தினத்தந்தி 14 July 2021 1:15 AM IST (Updated: 14 July 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவடடத்தில் 19 இடங்களில் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா உருவபொம்மை எரிப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 78 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்:-

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவடடத்தில் 19 இடங்களில் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா உருவபொம்மை எரிப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 78 பேர் கைது செய்யப்பட்டனர்.

எடியூரப்பா உருவபொம்மை எரிப்பு

மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட முயற்சி செய்வதைக் கண்டித்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் எடியூரப்பாவின் உருவபொம்மையை எரித்து திருச்சி முதல் கடலூர் வரை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி தஞ்சை ரெயில் நிலையம் அருகே காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் நேற்று காலை போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார். பொருளாளர் மணிமொழியான், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சிமியோன் சேவியர்ராஜ், தமிழர் தேசிய பாதுகாப்பு கழக பொது செயலாளர் குணசேகரன், தமிழ் தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் வைகறை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் தமிழ் தேசிய பேரியக்க நிர்வாகிகள் ராசு முனியாண்டி, பழ.ராஜேந்திரன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியை சேர்ந்த வெற்றி மற்றும் பல்வேறு விவசாய அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

தண்ணீரை ஊற்றி அணைத்தனர்

போராட்டத்தின்போது கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா உருவபொம்மை மற்றும் படங்களை தீ வைத்து எரித்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் உருவபொம்மை மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
பின்னர் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் நிருபர்களிடம் கூறுகையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதிய அணையை கர்நாடக அரசு கட்டுகிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. எனவே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான தொடக்கநிலைப் பணிகள் நடைபெறுகிறதா? என்பதை அறிய உண்மை அறியும் குழுவை தமிழக அரசு அனுப்ப வேண்டும்.

தடையாணை

தொடக்கநிலை பணிகள் நடந்தால் அது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்து தடையாணை கேட்க வேண்டும். ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தொடுக்கப்பட்ட வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும். இறுதி தீர்ப்பு வரும் வரை கர்நாடக அரசுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இந்த பணியை தொடங்கக்கூடாது என கர்நாடக முதல்-மந்திரிக்கு மத்திய நீர் வளத் துறை கடிதம் அனுப்பி பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் ஒத்துழையாமை இயக்கத்தை தமிழக அரசு நடத்த வேண்டும். கர்நாடகத்துக்கு எதிரான பொருளாதாரத்தடையை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

78 பேர் கைது

இதே போல் தஞ்சை மாவட்டம் முழுவதும் 19 இடங்களில் உருவபொம்மை எரிப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 78 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story