குப்பை தொட்டியில் பச்சிளம் குழந்தை உடல்
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள குப்பை தொட்டியில் பச்சிளம் குழந்தையின் உடல் கிடந்தது. பையில் கொண்டு வந்து வீசிய பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள குப்பை தொட்டியில் பச்சிளம் குழந்தையின் உடல் கிடந்தது. பையில் கொண்டு வந்து வீசிய பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பச்சிளம் குழந்தையின் உடல்
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் உள்ளது. இங்கு துணை சுகாதார நிலைய அலுவலகம், உணவு பாதுகாப்புத்துறை அலுவலகம் உள்ளிட்ட சில அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கட்டிடம் முன்பு குப்பை தொட்டி ஒன்று உள்ளது.
நேற்று மாலை 5 மணி அளவில் சேலம் கிச்சிப்பாளையம் காளிக்கவுண்டர் காடு பகுதியை சேர்ந்த மீனா (வயது 35) என்ற பெண் குப்பை தொட்டியில் இரும்பு உள்ளிட்ட பொருட்கள் ஏதாவது கிடைக்குமா? என்று பார்ப்பதற்காக சென்றார். அந்த குப்பை தொட்டியில் ஒரு பையில் பிறந்து ஓரிரு நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் உடல் கிடந்தது.
போலீஸ் விசாரணை
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், கலெக்டர் அலுவலகம் அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் கூறினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். குழந்தையின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டனர்.
அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சுமார் 55 வயது பெண் ஒருவர் ஒரு பையில் குப்பை தொட்டி அருகே வருவதும், அந்த பையை குப்பை தொட்டியில் வீசுவது போன்ற காட்சிகள் அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
யார் அந்த பெண்?
குப்பை தொட்டியில் பையை வீசிய பெண் யார்? என்பது குறித்து அடையாளம் காண்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேநேரத்தில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண்கள் யார் யார்? என்ற விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். குழந்தை இறந்து பிறந்ததால் குப்பை தொட்டியில் வீசப்பட்டதா அல்லது முறைதவறி பிறந்ததால் குப்பை தொட்டியில் வீசப்பட்டதா என்ற விவரம் தெரியவில்லை.
கண்காணிப்பு கேமராவில் பதிவான பெண்ணை பற்றிய விவரம் தெரிய வந்ததால்தான், குழந்தை குப்பை தொட்டியில் வீசப்பட்டதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர். கலெக்டர் அலுவலகம் அருகில் அதுவும் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பச்சிளம் குழந்தையின் உடல் குப்பை தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story