பெங்களூருவில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழும் அபாயம்; பொதுமக்கள் பீதி
பெங்களூருவில் அதிகாரிகளின் அலட்சியத்தால் 4 மாடி கட்டிடம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கட்டிடத்தின் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்கள் பீதி அடைந்துள்ளனர்.
பெங்களூரு: பெங்களூருவில் அதிகாரிகளின் அலட்சியத்தால் 4 மாடி கட்டிடம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கட்டிடத்தின் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்கள் பீதி அடைந்துள்ளனர்.
4 மாடி கட்டிடம்
பெங்களூரு ராஜாஜிநகர் 6-வது பிளாக் கருமாரியம்மன் கோவில் எதிரே வசித்து வருபவர் கோவிந்தன். இவருக்கு தரை தளத்துடன் 4 மாடிகளை கொண்ட கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தின் முன்பாக ரோட்டில் குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக கனரக வாகனத்தை பயன்படுத்தி மண் அள்ளும் பணிகள் நடந்தது. இந்த பணிகள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் முன்னிலையிலேயே நடைபெற்றது.
அப்போது கனரக வாகனம் மூலம் மண்ணை அள்ளுகையில், கோவிந்தன் வீட்டுடன் இணைக்கப்பட்டு இருந்த கான்கிரீட்டையும், வாகனம் இழுத்ததாக தெரிகிறது. இதன் காரணதாக 4 மாடி கட்டிடம் ஒருபுறமாக சாய்ந்து விட்டது. அந்த கட்டிடம் எந்த நேரம் வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அக்கம், பக்கத்தில் வசிப்பவர்கள்...
இதையடுத்து, அந்த கட்டிடத்தில் வசிப்பவர்கள், அங்கிருந்து மாற்றப்பட்டுள்ளனர். மேலும் இடிந்து விழும் தருவாயில் உள்ள கட்டிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டார்கள். அந்த கட்டிடம் தற்காலிகமாக இடிந்து விழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டிடம் ஒருபுறமாக சாய்வதற்கு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம் என்று கோவிந்தன் மற்றும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். கட்டிடம் இடிந்து விழ வாய்ப்புள்ளதால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் பீதி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story