திருமணம் செய்து கொள்வதாக கூறி பேராசிரியை உள்பட பல பெண்களிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்த வாலிபர்


திருமணம் செய்து கொள்வதாக கூறி பேராசிரியை உள்பட பல பெண்களிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்த வாலிபர்
x
தினத்தந்தி 13 July 2021 9:38 PM GMT (Updated: 13 July 2021 9:38 PM GMT)

திருமணம் செய்து கொள்வதாக கூறி பேராசிரியை உள்பட பல பெண்களிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்து வந்த வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் பெண்களிடம் மைசூரு மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறி ஏமாற்றியதும் அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு: திருமணம் செய்து கொள்வதாக கூறி பேராசிரியை உள்பட பல பெண்களிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்து வந்த வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் பெண்களிடம் மைசூரு மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறி ஏமாற்றியதும் அம்பலமாகி உள்ளது.

இளம்பெண் புகார்

பெங்களூரு ஒயிட்பீல்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் 30 வயது இளம்பெண். இவர் சமீபத்தில் ஒயிட்பீல்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் திருமண இணையதளத்தில் எனது புகைப்படம் மற்றும் விவரங்களை பதிவு செய்து இருந்தேன். இந்த நிலையில் எனது செல்போன் எண்ணுக்கு அழைத்து பேசிய ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். நானும் சம்மதம் தெரிவித்து இருந்தேன்.

இந்த நிலையில் உறவினருக்கு உடல்நிலை சரியில்லை என்று என்னிடம் ரூ.7.70 லட்சம் வாங்கி மோசடி செய்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

மைசூரு மன்னர் குடும்பம்

இந்த நிலையில் ஒயிட்பீல்டு பொருளாதார குற்றப்பிாிவு போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்களை ஏமாற்றியதாக ஒரு வாலிபரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா பைலகுப்பே கிராமத்தை சேர்ந்த சித்தார்த் (வயது 33) என்பது தெரியவந்தது.

இவர் திருமண இணையதளங்களில் மாப்பிள்ளை தேடி விளம்பரம் செய்து இருக்கும் இளம்பெண்களின் செல்போன் எண்களை எடுப்பார். பின்னர் அந்த பெண்களிடம் நான் மைசூரு மன்னர் குடும்பத்தை சேர்ந்தவன் என்றும், சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருவதாகவும் கூறுவார். பின்னர் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று பெண்களிடம் கூறுவார். பின்னர் சிறிது நாட்கள் பேசிவிட்டு பெண்களிடம் ஏதாவது காரணங்களை சொல்லி லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்து வந்தது தெரியவந்தது.

ரூ.42 லட்சம் மோசடி

இதுவரை கல்லூரி பேராசிரியை உள்பட ஏராளமான பெண்களிடம் ரூ.42 லட்சத்தை சித்தார்த் மோசடி செய்து உள்ளார். தன்னிடம் பேசும் பெண்களிடம் சித்தார்த் தனது பெயரை சித்தார்த் அர்ஸ், சான்டி, வினய், முத்து ஆகிய பெயர்களில் பேசி வந்ததும் அம்பலமானது. கைதான சித்தார்த்திடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story