திருச்சி மாநகரில் இளைஞர்களிடம் போதை மாத்திரை, கஞ்சா விற்பனை; l7 பேர் கைது


திருச்சி மாநகரில் இளைஞர்களிடம் போதை மாத்திரை, கஞ்சா விற்பனை; l7 பேர் கைது
x
தினத்தந்தி 14 July 2021 4:02 AM IST (Updated: 14 July 2021 4:02 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகரில் இளைஞர்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்ற 7 பேர் கும்பலை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

மலைக்கோட்டை,
திருச்சி மாநகரில் இளைஞர்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்ற 7 பேர் கும்பலை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

போதை மாத்திரை, கஞ்சா விற்பனை

திருச்சி மாநகரில் மதுரை ரோடு ஜீவா நகர் பின்புறம் ரெயில்வே கேட் அருகே போதைக்கு உபயோகப்படுத்தும் மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாநகர போலீஸ் கமிஷனருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 6 பேர் கும்பலை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் போதை மாத்திரை விற்கும் கும்பல் என தெரிந்ததால் கைது செய்யப்பட்டனர். 

கைதானவர்கள் உறையூர் வடிவேல் நகரை சேர்ந்த குமார் (வயது 23), வரகனேரி பஜார் தெற்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராம்நாத் (31), தென்னூரை சேர்ந்த நந்தகுமார் (24), உறையூர் நவாப் தோட்டம் நெசவாளர் காலனியை சேர்ந்த பாலாஜி (20), காந்தி மார்க்கெட் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த பிரகாஷ் (26) மற்றும் உறையூர் வெக்காளியம்மன் நகரை சேர்ந்த குமார் என்ற குமரேசன் (24) ஆகியோர் ஆவர்.

இளைஞர்களுக்கு விற்பனை

மேலும் அவர்களை சோதனை செய்ததில் மருத்துவரின் மருத்துவ சீட்டு இன்றி விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட நிட்ரவேட், நிட்ரோசன், டைடல் ஆகிய மாத்திரைகளை போதை மருந்தாக மாற்றி பயன்படுத்தி வந்ததும், இவற்றை பிற இளைஞர்களிடமும் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள் மற்றும் மெப்ஹென்டர்மைன் சல்பேட்-1 பாட்டில், 10 ஊசிகள் ஆகியவற்றையும், விற்பனைக்காக வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணையில், திருச்சி உறையூர் சாலை ரோட்டில் எம்.ஏ.எம். அவென்யூவை சேர்ந்த சக்திதாசன் (31) என்பவர் அவரின் மனைவி ருத்ராதேவி பெயரில் ஸ்ரீபார்மஸி என்ற மொத்த மருந்து வினியோகம் செய்யும் உரிமம் எடுத்து தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், மருந்து கடையை மூடிவிட்டு அதே உரிமத்தை வைத்து கள்ளத்தனமாக திருப்பூரில் உள்ள மருந்து கடை மூலமாக கைதான 6 பேருடன் சேர்ந்து போதை மாத்திரைகளை வாங்கி இளைஞர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது தெரிய வந்தது.

7 பேர் கைது

இதனால், சக்திதாசனும் கைது செய்யப்பட்டார். கைதான 7 பேர் மீதும் கோட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைதான சக்திதாசனின் மொத்த உரிம சான்றும் பறிமுதல் செய்யப்பட்டது. 3 இருசக்கர வாகனங்கள், 6 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள், ஊசிகள் ஆகியவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் என்றும், 5 கிலோ கஞ்சா மதிப்பு ரூ.1½ லட்சம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கமிஷனர் எச்சரிக்கை

போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனை செய்தவர்களை கைது செய்த தனிப்படையினரை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டினார். மேலும் திருச்சி மாநகரில் உள்ள மருந்து கடைகளில் உரிய மருந்து சீட்டு இல்லாமல் போதை மாத்திரை மற்றும் மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது. அவ்வாறு மருந்துச் சீட்டு இன்றி மருந்துகள் விற்பனை செய்தால் மருந்துக் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் மருந்தக உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Next Story