தூத்துக்குடியில் குடிநீர் குழாயில் பொருத்தப்பட்ட 19 மின் மோட்டார்கள் பறிமுதல் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


தூத்துக்குடியில்  குடிநீர் குழாயில்  பொருத்தப்பட்ட  19 மின் மோட்டார்கள் பறிமுதல் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 14 July 2021 4:40 PM IST (Updated: 14 July 2021 4:40 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் குழாயில் பொருத்தப்பட்ட 19 மின்மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் குழாயில் பொருத்தப்பட்ட 19 மின்மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குடிநீர்
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தேவையான குடிநீர் வல்லநாடு தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து பகிர்மான குழாய்கள் மூலம் மாநகரில் உள்ள 30 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு கொண்டுவரப்படுகிறது. அதன் மூலம் மாநகர பகுதிகளுக்கு சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநகராட்சி மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரை மின்மோட்டார் மூலம் நேரடியாக உறிஞ்சுவதால், நீர் அழுத்தம் ஏற்பட்டு குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் மாநகராட்சி பகுதியில் உள்ள குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டாரை பொருத்தி தண்ணீரை உறிஞ்சினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ அறிவித்து இருந்தார்.
பறிமுதல்
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் அந்தந்த உதவி என்ஜினீயர், இளநிலை என்ஜினீயர் மற்றும் அலுவலர்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று குடிநீர் குழாயில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளதா என்று ஆய்வு செய்தனர். அதன்படி வடக்கு மண்டலத்தில் 2 மோட்டார்களும், மேற்கு மண்டலத்தில் 8 மோட்டார்களும், கிழக்கு மண்டலத்தில் 8 மோட்டார்களும், தெற்கு மண்டலத்தில் ஒரு மோட்டார் ஆக மொத்தம் 19 மின்மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால் தூத்துக்குடியில் நேற்று காலை பரபரப்பு நிலவியது.

Next Story