தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஆர்வத்துடன் குவிந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பொதுமக்கள்


தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில்  ஆர்வத்துடன் குவிந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 14 July 2021 6:33 PM IST (Updated: 14 July 2021 6:33 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஆர்வத்துடன் ஏராளமான பொதுமக்கள் குவிந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஆர்வத்துடன் ஏராளமான பொதுமக்கள் குவிந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
கொரோனா தடுப்பூசி
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி 80-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளும் போடப்பட்டு வந்தன. இதில் கோவேக்சின் தடுப்பூசியை முதல் தவணையாக பலர் போட்டுக் கொண்டனர். சமீபகாலமாக கோவேக்சின் தடுப்பூசி வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் 2-வது தவணை தடுப்பூசி போட முடியாமல் மக்கள் சிரமத்தில் இருந்தனர்.
மக்கள் கூட்டம்
இந்த நிலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று 2-வது தவணைக்காக சுமார் 300 கோவேக்சின் தடுப்பூசிகள் வந்தன. இதனால் நேற்று காலை முதல் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி முகாம் டாக்டர் மாலையம்மாள், நலக்கல்வி அலுவலர் சங்கரசுப்பு ஆகியோர் மேற்பார்வையில், பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சுமார் 1½ மணி நேரத்தில் அனைத்து கோவேக்சின் தடுப்பூசிகளும் போடப்பட்டு காலியாகி விட்டன. அதே போன்று கோவிஷீல்டு தடுப்பூசியும் தொடர்ந்து போடப்பட்டன.
கோவில்பட்டி
கோவில்பட்டி அரசு மருத்துவமனை, புதுகிராமம், செக்கடி தெரு நாடார் நடுநிலைப்பள்ளி, வீரவாஞ்சி நகர், ககாந்திநகர், நகர சபை அலுவலகம் ஆகிய இடங்களில் கொரோனா கோவேக்சின் தடுப்பூசி முகாம்கள் நேற்று நடத்தப் பட்டது.
நீண்ட வரிசையில்...
கோவில்பட்டி மாவட்ட அரசு மருத்துவ மனையில் பொது மக்கள் தடுப்பூசி போடுவதற்கு நேற்று காலை முதலே ஆர்வத்துடன் பொதுமக்கள் கூடினர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று ஊசி போடுவதற்கு காத்திருந்தனர். ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன், நிலைய மருத்துவர் பூவேஸ்வரி, டாக்டர் ஸ்ரீ வெங்கடேஷ் ஆகியோர் கூட்டத்தை ஒழுங்கு படுத்தி தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்தனர்.
ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த 250 தடுப்பூசிகள் வேகமாக போட்டு தீர்ந்தது. மேலும் 100 பேர் வரிசையில் காத்திருந்தனர். தடுப்பூசி தீர்ந்து விட்டதால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி ெசன்றனர். மற்ற 5 இடங்களில் செயல்பட்ட முகாம்களில் 1350 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
பரிசோதனை முகாம்
கோவில்பட்டி மெயின் ரோடு ஐ.என்.டி.யு. அலுவலகம் எதிரில் கொரோனா பரிசோதனை முகாம் டாக்டர்கள் மனோஜ், ரமலா ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினரால் நடத்தப்பட்டது. இதில் 170 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.

Next Story