20 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு
தேனி மாவட்டத்தில் 20 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் கூறினார்.
ஆண்டிப்பட்டி:
கருப்பு பூஞ்சை
இந்தியாவில் கொரோனா 2-வது அலையால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர். கருப்பு பூஞ்சையின் பாதிப்பு தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கண்டறியப்பட்டு வருகிறது.
இதையடுத்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கருப்பு பூஞ்சை நோய்க்கான தனி வார்டுகள் அமைக்கப்பட்டன. அதில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் கருப்பு பூஞ்சை பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு தொடங்கப்பட்டது.
20 பேர் பாதிப்பு
இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 20 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜிநாதனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
மாவட்டத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 20 பேர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சை
அவர்களில் 3 பேருக்கு நோய் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து அவர்கள் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீதமுள்ள 17 பேருக்கும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர்களில் 9 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். இன்னும் 8 பேர் மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை இறப்புகள் எதுவும் நிகழவில்லை. மேலும் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் போதுமான அளவு இருப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story