காட்பாடியில் ஊதுபத்தி தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து


காட்பாடியில் ஊதுபத்தி தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 14 July 2021 8:44 PM IST (Updated: 14 July 2021 8:45 PM IST)
t-max-icont-min-icon

காட்பாடியில் ஊதுபத்தி தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

வேலூர்,

காட்பாடி குமரப்பநகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே ஊதுபத்தி தயார் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். 
கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக இந்த நிறுவனம் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் ஊதுபத்தி நிறுவனத்தில் உற்பத்தி தொடங்கியது.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல வேலை முடிந்த பின்னர் தொழிலாளர்கள் நிறுவனத்தை மூடிவிட்டு சென்றனர். 
இந்த நிலையில் நேற்று காலையில் ஊதுபத்தி நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அங்கிருந்த பொருட்கள் தீப்பிடித்து மளமளவென்று பற்றி எரிய தொடங்கியது. அதனால் அங்கிருந்து கரும்புகை வெளியேறியது. இதைக்கண்ட அப்பகுதிமக்கள் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

பொருட்கள் எரிந்து நாசம்

அதன்பேரில் காட்பாடி நிலைய அலுவலர் (பொறுப்பு) முருகேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். 

இந்த தீ விபத்தில் நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த ஊதுபத்தி தயாரிக்க பயன்படும் குச்சிகள், மாவு மூட்டை உள்பட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. 
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து காட்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story