கத்தியை காட்டி மிரட்டி பணம்பறிக்க முயன்றதால் வெட்டினேன், கைதான லாரி டிரைவர் வாக்கு மூலம்
கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றதால் வெட்டியதாக, வாலிபர் கொலை வழக்கில் கைதான லாரி டிரைவர் தெரிவித்துள்ளார்.
ஆற்காடு,
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் பகுதியில் கடந்த 12-ந்் தேதி இரவு மோட்டார் சைக்கிளை கன்டெய்னர் லாரி மோதி சென்றதில் ஏற்பட்ட தகராறில் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் அருண் ஆகிய இருவரையும் லாரி டிரைவர் வெட்டியதில் மணிகண்டன் என்ற வாலிபர் பலியானார். படுகாயமடைந்த அருண் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்தசம்பவம் குறித்து அருண் கொடுத்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து லாரி டிரைவரை தேடி வந்தனர்.
லாரி டிரைவர் பிடிபட்டார்
இந்த சம்பவத்தில் தொடர்புடைய கன்டெய்னர் லாரி டிரைவர் தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா ராயப்பட்டி பகுதியை சேர்ந்த ஜான் பாஸ்கோ (வயது 36) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் பிடித்து ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் டிரைவர் ஜான் பாஸ்கோ கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:-
பணம் பறிக்க முயன்றதால் வெட்டினேன்
சம்பவம் நடைபெற்ற அன்று ஜான் பாஸ்கோ லாரியை நிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது லாரியின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த 2 வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க அவர்கள் வைத்திருந்த கத்தியை பிடுங்கி இருவரையும் வெட்டியுள்ளார். இதில் ஆபத்தான நிலையில் இருந்த இருவரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர். செல்லும் வழியில் மணிகண்டன் இறந்துள்ளார்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
ஜான் பாஸ்கோவை மிரட்டுவதற்கு முன்பு மற்றொரு லாரியை மடக்கி அதில் இருந்த டிரைவரிடம் பணத்தைப் பறித்தது, காயமடைந்த அருணிடம் விசாரணை செய்ததில் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜான் பாஸ்கோ கைது செய்தனர்.
Related Tags :
Next Story