ரெயில் நிலையங்களில் சரக்கு ரெயில்களை 100 கிமீ வேகத்தில் இயக்க தண்டவாளம் மாற்றி அமைப்பு
ரெயில் நிலையங்களில் சரக்கு ரெயில்கள் நிற்காமல் செல்லும் வகையில், 100 கி.மீ. வேகத்தில் இயக்க தண்டவாளங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன.
திண்டுக்கல்:
ரெயில் நிலையங்களில் சரக்கு ரெயில்கள் நிற்காமல் செல்லும் வகையில், 100 கி.மீ. வேகத்தில் இயக்க தண்டவாளங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன.
சரக்கு ரெயில்கள்
நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்தில் ரெயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரேஷன்பொருட்களே அதிகஅளவில் சரக்கு ரெயில்களில் கொண்டு செல்லப்பட்டன. ஆனால் தற்போது அனைத்து வகையான பொருட்களும் ரெயில்களில் கொண்டு செல்லப்படுகின்றன.
இதற்கிடையே கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் வாகன போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
எனவே சரக்குகள் தடையின்றி சென்றடையும் வகையில் ரெயில்களில் அனுப்பப்படுகின்றன. இதன் விளைவாக கொரோனா ஊரடங்கால் சரக்கு ரெயில் சேவை இருமடங்காக உயர்ந்துள்ளது.
தண்டவாளம் மாற்றி அமைப்பு
இந்த சரக்கு ரெயில்களை பொறுத்தவரை அதிகபட்சமாக 100 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். அதற்கு வசதியாக தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் ரெயில் நிலையங்களில் 15 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்கப்படுகிறது. மேலும் பயணிகள் ரெயில்களின் வருகைக்காக, சரக்கு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படுகிறது.
இதனால் சரக்கு ரெயில்கள் உரிய நேரத்தில் சம்பந்தப்பட்ட ஊரை சென்றடைய முடியாத நிலை உள்ளது. இதை தவிர்க்கும் வகையில், சரக்கு ரெயில்கள் எந்த இடத்திலும் நிற்காமல் இயக்கப்பட உள்ளது. அதேபோல் புறப்படும் மற்றும் சேரும் இடங்களை தவிர இடையில் உள்ள ரெயில் நிலையங்களில் நிற்காமல் 100 கி.மீ. வேகத்தில் சரக்கு ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இதற்காக அனைத்து ரெயில் நிலையங்களிலும் குறிப்பிட்ட தண்டவாளங்கள் தரமாக மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 3, 4-வது நடைமேடை தண்டவாளங்கள் விரைவில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. அதன்பின்னர் சரக்கு ரெயில்கள் அந்த தண்டவாளங்களில் இயக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story