பலத்த காற்று, மழையால் சிறுமலையில் மிளகு விளைச்சல் பாதிப்பு


பலத்த காற்று, மழையால் சிறுமலையில் மிளகு விளைச்சல் பாதிப்பு
x
தினத்தந்தி 14 July 2021 9:57 PM IST (Updated: 14 July 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

பலத்த காற்று, மழைக்கு பூ, பிஞ்சு உதிர்ந்ததால் சிறுமலையில் மிளகு விளைச்சல் பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல்:
பலத்த காற்று, மழைக்கு பூ, பிஞ்சு உதிர்ந்ததால் சிறுமலையில் மிளகு விளைச்சல் பாதிக்கப்பட்டது. பலத்த காற்று, மழையால்
  எழில் கொஞ்சும் சிறுமலை
திண்டுக்கல் அருகே சிறுமலை அமைந்து உள்ளது. இந்த சிறுமலை, சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக பசுமையான இடமாக சிறுமலை திகழ்கிறது. இதனால் சிறுமலைக்கு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.
இங்கு சிறுமலை, சிறுமலை புதூர், பழையூர் உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இதனை நம்பியே மக்கள் வாழ்கின்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் சிறு விவசாயிகள் ஆவர்.
மிளகு சாகுபடி 
இங்கு மா, பலா, வாழை, எலுமிச்சை, பீன்ஸ், சவ்சவ் மட்டுமின்றி மிளகும் பயிரிடப்படுகிறது. இந்த மிளகு சாகுபடியில் ஓரளவு வருமானம் கிடைப்பதால் விவசாயிகள், அதில் ஆர்வம் காட்டுகின்றனர். 
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மிளகு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே போதிய தண்ணீர் கிடைக்காமல் மிளகு தரம் குறைந்தது. இதனால் ஒரு கிலோ மிளகு ரூ.200-க்கு விற்றதால் விவசாயிகளின் வருமானம் பாதித்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக பருவமழை பெய்து வருகிறது. இதனால் சிறுமலை பகுதியில் மிளகு கொடிகளில் பூக்கள் பூத்து குலுங்கின. ஒருகட்டத்தில் பூக்களும், பிஞ்சுகளுமாக மிளகு கொடிகள் இருந்த நிலையில் அவ்வப்போது பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த காற்று, மழைக்கு மிளகு கொடிகளில் இருந்து பூக்களும், பிஞ்சுகளும் உதிர்ந்து விட்டன.
விளைச்சல் பாதிப்பு
காற்றிலும், மழையிலும் இருந்து தப்பித்த மிளகு, நன்கு விளைந்து தற்போது அறுவடை செய்யப்படுகின்றன. இவற்றை விவசாயிகள் தங்கள் வீட்டு முன்பு வெயிலில் உலர்த்தி, தரம் பிரிக்கின்றனர். இதையடுத்து திண்டுக்கல் மற்றும் பிற பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் சிறுமலைக்கு சென்று மிளகு வாங்கி செல்கின்றனர்.
அதேநேரம் காற்று, மழையால் கடந்த ஆண்டை விட, தற்போது மிளகு விளைச்சல் குறைந்து விட்டது. ஆனால் தரமான மிளகு விளைந்து இருப்பதால் நல்ல விலை கிடைத்து வருகிறது. அதன்படி ஒரு கிலோ மிளகு ரூ.500 வரை விற்பனை ஆகிறது. இது, விவசாயிகளுக்கு ஓரளவு ஆறுதலாக உள்ளது.

Next Story