உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது
உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது
உடுமலை:
உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது. அத்துடன் அ.தி. மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தி.மு.க. உறுப்பினர் ஒருவரும் வெளிநடப்பு செய்தார்.
ஒன்றியக்குழு கூட்டம்
உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரணக்கூட்டம், ஊராட்சி ஒன்றியக்குழு கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மு.மகாலட்சுமி (தி.மு.க) தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கே.ஏ.சண்முகவடிவேல் (தி.மு.க), ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மு.கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.ரொனால்டு செல்டன் பெர்ணாண்டஸ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
கூட்டம் தொடங்கியதும் கூட்ட நிகழ்ச்சி நிரழில் கொண்டு வரப்பட்டிருந்த தீர்மானங்களை அலுவலக மேலாளர் ராஜேந்திரன் படிக்கத்தொடங்கினார்.
உடனே தி.மு.க.வைச்சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர் கே.வி.சங்கரன் எழுந்து வளர்ச்சித்திட்டப்பணிகளுக்காக நிதி ஒதுக்கி டெண்டர் விடப்படுவது குறித்து ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுவதில்லை என்றும் சில குற்றச்சாட்டுகளை சுமத்தியும் பேசிவிட்டு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
இதைத்தொடர்ந்து அ.தி. மு.க.வைச்சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.மோகன்ராஜ் பேசினார். அவர் பேசும்போது ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ரூ.40 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில் தென்பூத நத்தம் பகுதியிலும் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் அந்த பகுதி ஒன்றிய குழு உறுப்பினருக்கு கூட தகவல் தெரிவிக்கவில்லை.
இதற்கு கண்டனம் தெரிவித்தும், ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் டெண்டர் விபரங்களை ஒன்றியகுழு உறுப்பினர்களுக்கு தெரிவிக்க கோரியும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறிவிட்டு வெளிநடப்பு செய்தார். அவருடன் மற்ற அ.தி.மு.க. உறுப்பினர்கள் 5 பேரும் வெளிநடப்பு செய்தனர்.
வாக்குவாதம்
இதைத்தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சியைச்சேர்ந்த நாகமாணிக்கம் பேசும்போது, பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் விடுபட்ட பகுதிகளில் பணிகளை செய்யவேண்டும் என்று பேசினார். அவரது பேச்சில் உள்ள சில கருத்துக்களுக்கு ஆட்சேபனை தெரிவித்த ஒன்றியக்குழு தலைவர் மு.மகாலட்சுமி பேசும்போது சிலமாதங்களுக்கு முன்பு (அ.தி.மு.க.ஆட்சியின்போது) நடந்த நிகழ்ச்சிகளுக்கு ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் ஆகியோரை நீங்கள் அழைத்தீர்களா?. ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து நிதி ஒதுக்கி தந்தோம். நான் இருக்கும் பகுதியில்தான் பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. ஆனால் என்னையோ, துணைத்தலைவரையோ அழைக்கவில்லை. அப்படியிருந்து விட்டு இப்போது இப்படி பேசுகிறீர்கள் என்றார். அவர்கள் இருவரும் சில நிமிடங்கள் காரசாரமாக பேசிக்கொண்டனர். இந்த வாக்குவாதத்தைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story