கொடைக்கானலில் குப்பையில் வீசப்பட்ட மனித எலும்பு கூடுகள்


கொடைக்கானலில் குப்பையில் வீசப்பட்ட மனித எலும்பு கூடுகள்
x
தினத்தந்தி 14 July 2021 10:03 PM IST (Updated: 14 July 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் குப்பையில் வீசப்பட்ட மனித எலும்பு கூடுகளால் பரபரப்பு ஏற்பட்டது.

கொடைக்கானல்:
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்தநிலையில் நேற்று காலை நட்சத்திர ஏரி அருகே ஜிம்கானா பகுதியில் குப்பை தொட்டியில் மனித எலும்புக்கூடுகள் கிடப்பதை சுற்றுலா பயணிகள் சிலர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 
இதுகுறித்து அவர்கள் கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மனித எலும்பு கூடுகளை குப்பையில் வீசியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அதில், கொடைக்கானல் அறிவியல் அரங்கத்தில் இருந்து எலும்பு கூடுகள் கொண்டு வந்து போடப்பட்டது தெரியவந்தது. 
மேலும் குப்பையில் வீசப்பட்டது உண்மையான மனித எலும்பு கூடுகள் இல்லை என்பதும், அறிவியல் மையத்தில் பள்ளி மாணவர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த மாதிரி எலும்பு கூடுகள் என்பதும் தெரியவந்தது. இதனால் சுற்றுலா பயணிகளும், அப்பகுதி பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். பின்னர் குப்பை தொட்டியில் வீசப்பட்ட மாதிரி எலும்பு கூடுகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இந்த சம்பவம் கொடைக்கானலில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story