பா.ஜனதா கொள்கைகளை வீடு, வீடாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.


பா.ஜனதா கொள்கைகளை வீடு, வீடாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
x
தினத்தந்தி 14 July 2021 10:14 PM IST (Updated: 14 July 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா கொள்கைகளை வீடு, வீடாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

திருப்பூர்:
பா.ஜனதா கொள்கைகளை வீடு, வீடாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
திருப்பூரில் வரவேற்பு
தமிழக பா.ஜனதா தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலைக்கு நேற்று காலை திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணாமலை பேசியதாவது:-
தமிழகத்தில் உண்மையான சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி பா.ஜனதா கட்சி. சித்தாந்தத்தில் எந்த கட்சியும் நம் அருகில் வர முடியாது. உண்மையான நாட்டுப்பற்று, தேசியப்பற்று உள்ளவர்கள் இங்கு இருக்கிறார்கள். இத்தனை காலம் பா.ஜனதா கட்சிக்கு தமிழ்நாடு தேவைப்பட்டது. இப்போது தமிழ்நாட்டுக்கு பா.ஜனதா கட்சி தேவைப்படுகிறது.
ஏனென்றால் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து பொய்யை மட்டும் மூலதனமாக வைத்து, எதுவும் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் என்கிறது. நீட் வேண்டாம். புதிய கல்விக்கொள்கை வேண்டாம் என எதுவுமே வேண்டாம். எங்களை தனியாக விட்டு விடுங்கள் என்று சொல்கிறது. தி.மு.க. சரியாக ஆட்சி செய்கிறார்களா? என்றால் அதுவும் கிடையாது.
தி.மு.க.வினர் டோக்கன்
பிரதமர் மோடி மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கி வருகிறார். ஆனால் எங்கு சென்றாலும் தி.மு.க.வினர் டோக்கனை மொத்தமாக வாங்கிக்கொள்கிறார்கள். சாதாரண குடும்பத்தினருக்கு தடுப்பூசி சென்று சேருவதில்லை. தி.மு.க. குடும்பத்துக்குத்தான் தடுப்பூசி செல்கிறது. அதை மறைப்பதற்காகத்தான் மோடி தடுப்பூசி கொடுக்கவில்லை என்று பொய் கூறுகிறார்கள்.
அடுத்த 4 மாதத்தில் ஒவ்வொரு பொய்யையும் வேரறுப்போம். பா.ஜனதா கட்சி மீது மக்களுக்கு பெரிய மரியாதை இருக்கிறது. மோடி மீது மரியாதை வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் 13 ஆயிரம் கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்துக்கும் இந்த கட்சியை எடுத்துச்செல்ல வேண்டும். வீடு, வீடாக கட்சியின் கொள்கைகளை எடுத்துச்சொல்ல வேண்டும்.
ஆட்சிக்கு வந்தாக வேண்டும்
மத்திய அரசின் திட்டத்தால் அதிகம் பயன் அடைந்த ஊர் இந்த திருப்பூர். முத்ரா திட்டத்தில் அகில இந்திய அளவில் அதிகம் பயன்பெற்றவர்கள் திருப்பூர்க்காரர்கள் தான்.
நிச்சயம் வரும் காலம் பா.ஜனதா கட்சியின் காலம். இந்த கட்சியில் மட்டும் தான் உண்மையான தொண்டர்கள், தலைவர்கள் உள்ளனர். இந்த கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
அடுத்த 3 வருடங்கள் கடுமையாக பணியாற்ற நாம் தயாராக இருக்க வேண்டும். இனியும் நாம் பொறுத்திருக்க முடியாது. ஆட்சிக்கு வந்தாக வேண்டும். நல்ல சித்தாந்தங்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். நம் கட்சியின் மூலமாக மக்கள் பயன்பெற வேண்டும். மோடியின் திட்டங்கள் அனைத்து தமிழர்களுக்கும் சென்றடைய வேண்டும். உங்களின் முதன்மை சேவகனாக மாநில தலைவராக பதவியேற்க உள்ளேன். வருங்காலம் இந்த கட்சி அசுரத்தரமான வளர்ச்சி பெறும். உங்கள் ஒத்துழைப்பை கொடுங்கள். தமிழகத்தை மாற்றிக்காட்டுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
 வடக்கு மாவட்டத்தின் சார்பில் அண்ணாமலைக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டு வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது. மாநிலத்தலைவர் அண்ணாமலை காருக்கு முன்பாக ஆட்டோக்களில் ஊர்வலமாக வந்து வரவேற்பு கொடுத்தனர்.

Next Story