தாண்டிக்குடி அருகே ஜவுளிக்கடை உரிமையாளரை தாக்கி செல்போன் பறிப்பு
தாண்டிக்குடி அருகே ஜவுளிக்கடை உரிமையாளரை தாக்கி செல்போன் பறித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரும்பாறை:
கொடைக்கானல் ஆனந்தகிரி 2-வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் கண்ணன் (வயது 48). இவர் கொடைக்கானலில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவர் தனது கடைக்கு தேவையான ஜவுளி பொருட்களை வாங்குவதற்காக நேற்று முன்தினம் மதுரைக்கு சென்றார்.
பின்னர் அவர் அங்கிருந்து காரில் கொடைக்கானல் நோக்கி வந்து கொண்டிருந்தார். தாண்டிக்குடி அருகே மலைப்பாதையில் வாழகிரி என்ற இடத்தில் அவர் வந்தபோது, பின்னால் மற்றொரு காரில் வந்தவர்கள் அவரது காரை மோதுவது போல் முந்திச்சென்றனர்.
இதை வெங்கடேஷ் கண்ணன் தட்டிக் கேட்டார். அப்போது அவருக்கும், மற்றொரு காரில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள், வெங்கடேஷ் கண்ணனை தாக்கியதுடன், அவரது செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் தாண்டிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story