வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.
வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.30 லட்சம் மதிப்பிலான கட்டிடம், எந்திரம், கழிவு பஞ்சு எரிந்து சேதமானது.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
நூல் மில்லில் தீ
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள கரட்டுபாளையத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 55). இவர் வெள்ளகோவில் அருகே உள்ள சின்னக்கரையில் கடந்த 10 ஆண்டுகளாக நூல் மில் வைத்து நடத்தி வருகிறார்.
இங்கு சுற்றுப்பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் ஷிப்டு முறையில் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று பகலில் மில்லின் ஒரு பகுதியில் கழிவு பஞ்சு உடைக்கும் பணி நடந்தது. இதில் 5 ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கழிவு பஞ்சு உடைக்கும் எந்திரத்தில் தீப்பொறி ஏற்பட்டு கழிவு பஞ்சு மற்றும் சுத்தம் செய்து வைத்த பஞ்சு மூட்டைகளில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
ரூ.30 லட்சம் சேதம்
இதையறிந்த ஊழியர்கள் உடனடியாக தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. எனவே வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்துக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி தனசேகர் தலைமையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால், காங்கேயத்தில் இருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தீயணைப்பு படையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக மில்லில் இருந்த கழிவு பஞ்சு உடைக்கும் எந்திரம், கழிவு மற்றும் சுத்தம் செய்யப்பட்ட பஞ்சு, கட்டிடம் ஆகியவை சேதம் அடைந்தது. இதன்மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். தீ விபத்தில் மில் ஊழியர்கள் காயமின்றி தப்பினர்.
Related Tags :
Next Story