கள்ளக்குறிச்சியில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரசார வாகனம்


கள்ளக்குறிச்சியில்  உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரசார வாகனம்
x
தினத்தந்தி 14 July 2021 10:32 PM IST (Updated: 14 July 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்


கள்ளக்குறிச்சி

பிரசார வாகனம்

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடக்க நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இதில் கலெக்டர் ஸ்ரீதர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-

மக்கள் தொகை பெருக்கம்

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் பஸ் நிலையம், சந்தைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 
மேலும் நாட்டின் மேம்பாட்டுக்கும், தாய்மார்களின் நல்வாழ்வுக்கும் குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துதல் முதன்மையானதும் முக்கியமானதாகவும் உள்ளது.

சிறு குடும்ப நெறி

பொதுமக்கள் சிறு குடும்ப நெறியை பின்பற்றியும் திருமணத்துக்கேற்ற வயதில் திருமணம் செய்வது, முதல் குழந்தை பேறு காலத்தை தாமதப்படுத்த மேற்கொள்ள வேண்டிய குடும்ப நலமுறை நெறிகள் மற்றும் முதல் குழந்தைக்கும், 2-வது குழந்தைக்கும் இடையே பேறு கால இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். 
மேலும் ஆணும் பெண்ணும் சமம் என்பதற்கு செயல் வடிவம் கொடுத்து பெண் சிசு கொலையை தடுத்தல் மற்றும் இளம் வயது திருமணத்தை தடுத்தல், இளம் வயது கர்ப்பத்தை தடுத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம். 

ஒத்துழைக்க வேண்டும்

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முதல்வர் உஷா, இணை இயக்குநர்(மருத்துவம் மற்றும் குடும்ப நலம்) டாக்டர் சண்முகக்கனி, துணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் குடும்ப நலம்) மணிமேகலை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு, பழமலை மற்றும் புள்ளியியல்துறை உதவியாளர், வட்டார சுகாதார புள்ளியியல்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



























Next Story