ஊட்டியில் 30 ஆயிரம் அலங்கார செடிகள் தேக்கம்
பூங்காக்கள் மூடப் பட்டுள்ளதால் ஊட்டி ரோஜா பூங்காவில் 30 ஆயிரம் அலங்கார செடிகள் தேக்கம் அடைந்து உள்ளது.
ஊட்டி,
பூங்காக்கள் மூடப் பட்டுள்ளதால் ஊட்டி ரோஜா பூங்காவில் 30 ஆயிரம் அலங்கார செடிகள் தேக்கம் அடைந்து உள்ளது.
ரோஜா செடிகள்
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் நர்சரி உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ரோஜா செடிகள், அலங்கார செடிகள் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் சீசனை கருத்தில் கொண்டு அதிகமாக செடிகள் உற்பத்தி செய்து விற்பனைக்கு வைக்கப்படும்.
ரோஜா செடிகள் மற்றும் கொடிபோல் படர்ந்து வளரும் செடிகள் ஒன்று ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேக்டஸ் உள்பட 15 வகையான அலங்கார செடிகள் விற்பனைக்கு தயாராகின்றன. ரோஜா செடிகள் கவாத்து செய்து தொட்டிகளில் நடப்பட்ட பின்னர் 40 நாட்களில் வளர்ந்து விடுகிறது.
அலங்கார செடிகள் விதைத்து 50 நாட்களில் விற்பனைக்கு தயாராகி விடும். வழக்கமாக சீசனில் சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கானோர் வருவதால் மலர் செடிகள் விற்று தீர்ந்து விடும். சிலருக்கு கொடுக்க முடியாத நிலை காணப்பட்டது.
ஆனால், நடப்பாண்டில் கொரோனா பாதிப்பு காரணமாக உற்பத்தி செய்த மலர், அலங்கார செடிகள் விற்பனை செய்ய முடியாமல் நர்சரியில் தேக்கம் அடைந்து உள்ளது. இருப்பினும் பூங்கா பணியாளர்கள் செடிகளை பராமரித்து வருகின்றனர்.
விற்பனை இல்லை
தனியார் பூங்காக்கள், ஓட்டல்களில் இருந்து குறைந்த அளவிலான செடிகளை வாங்கி செல்கிறார்கள். மற்ற செடிகள் விற்பனை செய்யப்படாமல் உள்ளதால் வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, கோடை சீசனை கருத்தில்கொண்டு 40 ஆயிரம் ரோஜா, அலங்கார செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக பூங்காக்கள் மூடப்பட்டதால் விற்பனை செய்ய முடியவில்லை.
தற்போது வெளியிடங்களில் இருந்து 10 ஆயிரம் செடிகள் வாங்கிச் சென்று உள்ளனர். மீதமுள்ள 30 ஆயிரம் செடிகள் தேக்கமடைந்து இருக்கிறது. வருகிற நாட்களில் சுற்றுலா தலங்கள் திறந்தால் இதனை விற்பனை செய்ய முடியும் என்றனர்.
Related Tags :
Next Story