புகளூர் வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பழைய பாலம் இடிப்பு
நொய்யல் அருகே புகளூர் வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பழைய பாலம் இடிக்கப்பட்டதால் பொதுமக்கள், விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
நொய்யல்
பழைய பாலம்
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே முத்தனூரில் உள்ள புகளூர் வாய்க்காலின் குறுக்கே கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி கான்கிரீட் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக காவிரி ஆற்றிற்கு குளிப்பதற்கும், துணிகளை துவைத்து வருவதற்கும் பொதுமக்கள் சென்று வந்தனர்.
அதேபோல் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் விவசாயம் செய்துள்ள விவசாயிகள் தங்களின் பல்வேறு வகையான பணப்பயிர்களுக்கு தேவையான இடுபொருட்களை கொண்டு சென்று வந்தனர்.அதேபோல் விளைந்த பொருட்களையும் இந்த வழியாக கொண்டு வந்தனர்.பாலம் கட்டப்பட்டு சுமார் 60 ஆண்டுகள் ஆனதால்பாலம் மிகவும் பழுதடைந்து கீழே விழும் நிலையில் இருந்தது. இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த பாலத்தின் வழியாக செல்ல தடை விதித்தனர்.
பொதுமக்கள் அவதி
பின்னர் பலத்தை முழுமையாக இடித்து போட்டு விட்டனர். பாலம் இடிக்கப்பட்டு சுமார் ஒரு ஆண்டுகளுக்கும் மேல்ஆகியும் புதிய பாலம் கட்ட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் முத்தனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த வழியாக காவிரி ஆற்றுக்கு குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும், விவசாயிகள் ஆடு, மாடுகளை ஓட்டிச் சென்று காவிரி கரை மற்றும் புகளூர் வாய்க்கால் மேடு பகுதிகளில் மேய்ப்பதற்கும், விவசாயிகள் இடு பொருட்களை கொண்டு செல்வதற்கும், அதேபோல் விளைந்த பொருட்களை கொண்டு வருவதற்கும் முடியாமல் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர்.
கோரிக்கை
இதுகுறித்து பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும், உள்ளாட்சித்துறை அதிகாரிகளிடமும் முத்தனூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பொதுமக்கள் தொடர்ந்து காவிரி ஆற்றுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே புதிய பாலத்தை கட்டிக்கொடுத்து பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் உதவ வேண்டுமென முத்தனூர் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story