உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 15 July 2021 12:42 AM IST (Updated: 15 July 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

மாணவி சாவில் திடீர் திருப்பமாக அவரை தற்கொலைக்கு தூண்டியதாக சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செஞ்சி, 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கொங்கரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மகள் ரம்யா(வயது 14). இவர், அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். 
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி மாலை மாணவி ரம்யா திடீரென மாயமானார். இது குறித்து பச்சையப்பன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், தனது மகளை 17 வயது சிறுவன் கடத்திச்சென்று விட்டதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 
இதற்கிடையில் நேற்று முன்தினம் காலையில் அதே ஊரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது விவசாய கிணற்றில் ரம்யா பிணமாக மிதந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அங்கு திரண்டனர்.  பின்னர் அவர்கள், மாணவியை சில வாலிபர்கள் கொலை செய்து கிணற்றில் வீசியதாகவும், அவர்களை கைது செய்யக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பேச்சுவார்த்தை

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். தொடர்ந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மாணவி இறந்தது தொடர்பாக 7 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடலை வாங்க மறுத்து போராட்டம் 

இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மதியம் மாணவியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க கொங்கரப்பட்டுகிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது அங்கிருந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மாணவியின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 மாணவியை கொலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரையில் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி கோஷங்களை எழுப்பினர். இது குறித்த தகவலின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர்கள் சக்தி, தங்க குருநாதன், கலைச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 
இதில் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது பிரேத பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. இருப்பினும் மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
இதில் யாரேனும் மாணவியை தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். 
அதை ஏற்று மாணவியின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். பின்னர் மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி கொங்கரப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் (21) மற்றும் 17 வயதுடைய சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் சாவில் திடீர் திருப்பமாக அவரை தற்கொலைக்கு தூண்டியது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story