தி.மு.க.-அ.தி.மு.க.வினரிடையே வாக்குவாதம்


தி.மு.க.-அ.தி.மு.க.வினரிடையே வாக்குவாதம்
x
தினத்தந்தி 14 July 2021 7:16 PM GMT (Updated: 14 July 2021 7:16 PM GMT)

திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திட்டப்பணிகளுக்கு டெண்டர் விடும் பணியின்போது தி.மு.க.-அ.தி.மு.க.வினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து டெண்டர் பணிகள் ஒத்திவைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் நிதியின் மூலமாக சிறு விசை மின் இறைப்பான், நாடகமேடை, சிமெண்டு சாலை உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.43 லட்சம் நிர்வாக அனுமதி பெறப்பட்டது. ஆனால் சட்டமன்ற தேர்தல் காரணமாக டெண்டர் எதுவும் நடைபெறவில்லை. 
இந்த நிலையில் மேற்கண்ட பணிகளுக்கு டெண்டர் விடும் பணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எழிலரசு, முருகன் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வினர் திரளாக கலந்துகொண்டனர்.

வாக்குவாதம்

அப்போது டெண்டரில் குறிப்பிட்டுள்ள பணிகள் உளுந்தூர்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுருவால் கொண்டுவரப்பட்டது என்பதால் அந்த பணிகளை அ.தி.மு.க.வினருக்கு ஒதுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் காண்டீபன், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் சரவணகுமார் மற்றும் அ.தி.மு.க.வினர் கூறினர். 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமையிலான தி.மு.க.வினர் தற்போது தி.மு.க. ஆட்சி நடைபெறுவதால் பணிகளை எங்களுக்குத்தான் ஒதுக்க வேண்டும் என்று கூறினார்கள். இதனால் இரு கட்சியினருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.

போலீசார் விரைந்தனர்

இதுபற்றிய தகவல் அறிந்து விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், ராஜன், ராமதாஸ் உள்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்து இரு கட்சியினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. 
இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலரும், போலீசாரும் மேலதிகாரிகளிடம் ஆலோசனையைப் பெற்று மாலை 3.30 மணிக்கு ரூ.43 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு டெண்டர் விடும் பணி மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தனர். மேலும் இந்த அறிவிப்பை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் தகவல் பலகையில் ஒட்டினர். இதையடுத்து இரு கட்சியினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.  திருவெண்ணெய் நல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் டெண்டர் விடும் பணியின்போது தி.மு.க.- அ.தி.மு.க.வினரிடையே கடும்வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story