தொப்புள் கொடியுடன் கிணற்றில் பிணமாக கிடந்த பெண் குழந்தை
செஞ்சி அருகே தொப்புள் கொடியுடன் பச்சிளம் பெண் குழந்தை கிணற்றில் பிணமாக கிடந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே புதுசொரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், விவசாயி. இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றை தூர்வார முடிவு செய்தார். இதற்காக கிரேன் எந்திரத்தை வரவழைத்து தூர்வார பூஜை செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.
அப்போது கிணற்றை பார்த்தபோது, அதில் பச்சிளம் குழந்தை ஒன்று பிணமாக கிடந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே செஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சக்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கிருந்த கிரேன் மூலம் கிணற்றில் கிடந்த குழந்தையின் உடலை மீட்டனர். இதில் குழந்தை தொப்புள் கொடியுடன் காணப்பட்டது.
போலீசார் விசாரணை
மேலும் அந்த குழந்தை பிறந்து 2 நாட்களான பெண் குழந்தை என்பது தெரிந்தது. இதையடுத்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இருப்பினும் அந்த குழந்தை யாருடையது? அதனை யார் கிணற்றில் வீசிவிட்டு சென்றார்கள் என்பது பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதல் மூலம் பிறந்ததாலோ அல்லது பெண் குழந்தை என்பதாலோ குழந்தையை கிணற்றில் வீசி யாரேனும் கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story