150 எம்.எல்.ஏ.க்களை பெற்று பா.ஜ.க.வை ஆட்சி கட்டிலில் அமர்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது அண்ணாமலை பேச்சு


150 எம்.எல்.ஏ.க்களை பெற்று பா.ஜ.க.வை ஆட்சி கட்டிலில் அமர்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது அண்ணாமலை பேச்சு
x
தினத்தந்தி 14 July 2021 7:28 PM GMT (Updated: 14 July 2021 7:28 PM GMT)

150 எம்.எல்.ஏ.க்களை பெற்று பா.ஜ.க.வை ஆட்சி கட்டிலில் அமர்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என கரூரில் அண்ணாமலை கூறினார்.

கரூர்
நியமனம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மந்திரி சபை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த எல்.முருகனும் இடம்பெற்றார். எல்.முருகன் மத்திய மந்திரியாக பொறுப்பேற்றதை தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவராக கே.அண்ணாமலையை நியமனம் செய்து பா.ஜ.க. தலைமை அறிவித்தது. இந்நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பதவி ஏற்பு நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற உள்ளது.  இதனையொட்டி நேற்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோவையில் இருந்து காரில் புறப்பட்டு திருப்பூர், சேலம், நாமக்கல் வழியாக கார் மூலம் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் வந்தார்.
உற்சாக வரவேற்பு
இதையடுத்து அண்ணாமலைக்கு கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் செண்டை மேளம் முழங்க பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மகளிர் அணி மாநில துணைத்தலைவர் மீனா வினோத்குமார், பா.ஜ.க. பிரமுகர் வி.வி.செந்தில்நாதன் உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனர். பின்னர் காரில் இருந்தவாறு தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு அங்கிருந்து கரூருக்கு புறப்பட்டு சென்றார். 
இதைத்தொடர்ந்து கரூா் வெங்கமேட்டிற்கு வந்த அண்ணாமலைக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பொதுமக்களுக்கு கொரோனா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பேச்சு
தொடர்ந்து கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் பகுதிக்கு வந்த அண்ணாமலை தொண்டர்கள் முன்னிலையில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 
இதே ஊரை சேர்ந்த நான். அரவக்குறிச்சி வேட்பாளராக போட்டியிட்டேன். மாநில தலைவராக என்னுடைய முக்கியமான பொறுப்பு இந்த கட்சியை வளர்ப்பது. தமிழகத்தில் 13 ஆயிரம் கிராமங்கள் இருக்கின்றன. அனைத்து கிராமங்களுக்கும் நம்முடைய கட்சியின் கொள்கையினை எடுத்து செல்ல வேண்டும். அவர்களுக்காக நிச்சயம் நாம் பாடுபடுவோம். 
நம் கட்சியை பொறுத்தவரை தலைவன், தொண்டன் அனைவரும் சமம் தான். கரூர் மாவட்டத்தில் பா.ஜ.க. அசுர வளர்ச்சியில் இருக்கும். அதில் எந்தவொரு மாற்று கருத்தும் கிடையாது. ஏனென்றால் இதுவொரு வித்தியாசமான மாவட்டம். 
150 எம்.எல்.ஏ.க்கள்
கரூர் மாவட்டத்தில் பா.ஜ.க.வின் அரசியல் வித்தியாசமாக இருக்கும். அதை அடுத்த 6 மாத காலத்தில் பார்ப்பீர்கள். கடுமையாக நாம் உழைப்போம். நிச்சயமாக கரூரில் பா.ஜ.க.வின் பலத்தை நாம் பதிய வேண்டும். நாளை (16-ந்தேதி) உங்களுடைய சேவகனாக பொறுப்பேற்கிறேன். 
உங்களது அன்பும், ஆதரவும் எனக்கு வேண்டும். நிச்சயமாக பா.ஜ.க. 4 எம்.எல்.ஏ.க்களில் இருந்து 150 எம்.எல்.ஏ.வாக மாறுவது வெகுகாலம் கிடையாது. 150 எம்.எல்.ஏ.க்களை பெற்று ஆட்சி கட்டிலில் அமர்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 
இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி சென்றார்
இதையடுத்து கார் மூலம் கிருஷ்ணராயபுரம், குளித்தலை வழியாக திருச்சிக்கு புறப்பட்டு சென்றார்.

Next Story