குற்றாலத்தில் முள்ளம்பன்றியை அடித்து தின்ற சிறுத்தை


குற்றாலத்தில் முள்ளம்பன்றியை அடித்து தின்ற சிறுத்தை
x
தினத்தந்தி 15 July 2021 1:36 AM IST (Updated: 15 July 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் குடியிருப்பு பகுதிக்கு அருகில் முள்ளம்பன்றியை சிறுத்தை அடித்து தின்றது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

தென்காசி:
குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் ரோட்டில் கல்குவாரி உள்ளது. இந்த பகுதியில் பொதுமக்கள் நீண்ட காலமாக குடியிருந்து வருகிறார்கள். இந்த குடியிருப்பு பகுதியில் இருந்து சுமார் 200 அடி தூரத்தில் நேற்று மாலை ஒரு சிறுத்தை முள்ளம்பன்றியை அடித்து தின்று கொண்டிருந்தது. இதனை அந்த பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிலர் பார்த்து, அங்கு வசிக்கும் பொதுமக்களிடம் கூறினர். உடனே அவர்கள் அங்கு அச்சத்துடன் கூடினர். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குற்றாலம் வனச்சரகர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். ஆனால் அதற்குள் முள்ளம்பன்றியை சிறுத்தை தின்றுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டது. இதுகுறித்து வனச்சரகர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘வனப்பகுதியில் இருந்து சிறுத்தை அங்கு வந்து முள்ளம்பன்றியை அடித்து தின்றுவிட்டு சென்று உள்ளது. குடியிருப்பு பகுதி வனப்பகுதிக்கு அருகில் உள்ளது. எனவே பொதுமக்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது நல்லது. இதுகுறித்து அங்குள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்’ என்றார். 

Next Story