திருட்டு, கொள்ளை வழக்கில் 14 பேர் கைது; ரூ.2¼ கோடி வாகனங்கள் மீட்பு - போலீஸ் கமிஷனர் கமல்பந்த் பேட்டி


திருட்டு, கொள்ளை வழக்கில் 14 பேர் கைது; ரூ.2¼ கோடி வாகனங்கள் மீட்பு - போலீஸ் கமிஷனர் கமல்பந்த் பேட்டி
x
தினத்தந்தி 15 July 2021 1:56 AM IST (Updated: 15 July 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து ரூ.2¼ கோடி மதிப்பிலான வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:
  
கமல்பந்த் பார்வையிட்டார்

  பெங்களூரு கிழக்கு மண்டல போலீசார், நகரில் வாகன திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலை கைது செய்திருந்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கன்டீரவா உள்விளையாட்டு மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை போலீஸ் கமிஷனர் கமல்பந்த், கிழக்கு மண்டல சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன் பார்வையிட்டனர்.

  பின்னர் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

20 கார்கள் மீட்பு

  பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் உள்ள கோவிந்தபுரா, பானசாவடி, அல்சூர் உள்ளிட்ட போலீசார் நகரில் வாகன திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 14 பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் கோவிந்தபுரா போலீசார் சப்பீர் என்பவரை கைது செய்திருந்தார்கள். இவர் தனது கூட்டாளிகளான சரண் மற்றும் சக்தி வேலுவுடன் சேர்ந்து நகரில் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டு இருக்கும் கார்களை திருடுவார்கள்.

  அவ்வாறு திருடும் கார்களை விற்று கிடைக்கும் பணத்தை 3 பேரும் ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது சப்பீர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற 2 பேரும் தலைமறைவாக உள்ளனர். சப்பீர் கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு பகுதிகளில் திருடிய சொகுசு கார்கள் உள்பட ஒட்டு மொத்தமாக 20 கார்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த கார்களின் மதிப்பு ரூ.1 கோடியே 80 லட்சும் ஆகும்.

ரூ.2¼ கோடி மதிப்பு

  இதுபோல், பானசாவடி, அல்சூர், புலிகேசிநகர், ஜே.பி.நகர், ராமமூர்த்திநகர் போலீசார், நகரில் இருசக்கர வாகனங்களை திருடி விற்று வந்த 13 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 58 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.45 லட்சம் ஆகும். ஒட்டு மொத்தமாக 14 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.2¼ கோடி மதிப்பிலான வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 50-க்கும் மேற்பட்ட வாகன திருட்டு வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது.

  வாகன திருட்டில் ஈடுபட்ட கும்பலை திறமையாக செயல்பட்டு கைது செய்த கிழக்கு மண்டல போலீசாருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். அவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும்.
  இவ்வாறு அவர் கூறினார்.

  பேட்டியின் போது கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன், துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா உடன் இருந்தார்கள்.

Next Story