கர்நாடக சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் - சபாநாயகர் காகேரிக்கு சித்தராமையா கடிதம்
மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டி இருப்பதால் கர்நாடக சட்டசபை கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று கோரி சபாநாயகர் காகேரிக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை சபாநாயகர் காகேரிக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
கொரோனா 3-வது அலை
கர்நாடக சட்டசபையின் விதிகள்படி சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடரை ஜூலை மாதம் கூட்டி இருக்க வேண்டும். ஆனால் இந்த கூட்டத்தொடரை நடத்த அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது சட்ட விதிகளுக்கு எதிரானது. மாநில மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக நிதி, அரசியல், நிர்வாக, சுகாதாரத்துறைகளில் பிரச்சினைகள் உள்ளன.
கொரோனா 2-வது அலையை அரசு நிர்வகித்த விதம் மிக மோசமானது. இது மக்களுக்கு ஒரு கொடூரமான நிகழ்வாக அமைந்தது. இத்தகைய சூழ்நிலையில் கொரோனா 3-வது அலை விரைவில் தாக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். மக்களுக்கு சரியான முறையில் தடுப்பூசி வழங்கவில்லை. கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அரசு எந்த மாதிரியான ஏற்பாடுகளை செய்துள்ளது என்பது பற்றி தகவல் இல்லை.
கனிம முறைகேடுகள்
கர்நாடகத்திற்கு மத்திய அரசு சட்டப்படி வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் ஏமாற்றுகிறது. ஆயினும் மாநில அரசு அதுபற்றி குரல் எழுப்பாமல் மவுனமாக உள்ளது. இதற்கிடையே மாநில பா.ஜனதா அரசு ஊழலில் மிதக்கிறது. கர்நாடகத்தில் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விவசாயத்துறை முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
கல்வித்துறையும் மோசமான நிலையில் உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். கவுரவ கொலைகள் அதிகரித்துவிட்டன. மக்கள் பல்வேறு பிரச்சினைகளால் தற்கொலைகள் செய்து கொள்வது அதிகரித்துவிட்டது. கனிம முறைகேடுகள் நடந்து வருகின்றன.
உடனே கூட்ட வேண்டும்
மாநில மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விவாதித்து அதற்கு தீர்வு காண சட்டசபை கூட்டம் ஆண்டுதோறும் 60 நாட்கள் நடைபெற வேண்டும். சட்டசபை கூட்டத்தை ஆண்டுக்கு 4 முறை நடத்த வேண்டும். ஆனால் பா.ஜனதா அரசு விதிகளுக்கு மாறாக செயல்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு சட்டசபை கூட்டம் 31 நாட்கள் மட்டுமே நடந்தது.
நடப்பு ஆண்டில் இதுவரை 20 நாட்கள் மட்டுமே சட்டசபை கூட்டம் நடைபெற்று உள்ளது. கர்நாடக பா.ஜனதா அரசு அமைந்த பிறகு பெலகாவியில் இதுவரை ஒரு முறை கூட சட்டசபை கூட்டத்தை நடத்தவில்லை. சட்டப்படி இது தவறு. அதனால் கர்நாடக சட்டசபை கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story