ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் கர்நாடக வீரர்களுக்கு தலா ரூ.5 கோடி பரிசு - எடியூரப்பா அறிவிப்பு


ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் கர்நாடக வீரர்களுக்கு தலா ரூ.5 கோடி பரிசு - எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 15 July 2021 2:44 AM IST (Updated: 15 July 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் கர்நாடக வீரர்களுக்கு தலா ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

தலா ரூ.5 கோடி பரிசு

  ஜப்பான் டோக்கியாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் கர்நாடகத்தை சேர்ந்த வீரர்களான ஹரிநடராஜ், அதிதி அசோக், பவுத் மிர்சா ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சம் ஊக்கத்தொகையை முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில் விளையாட்டுத்துறை மந்திரி நாராயணகவுடா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் எடியூரப்பா பேசும்போது கூறியதாவது:-

  ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு தலா ரூ.5 கோடியும், வெள்ளி வெல்பவர்களுக்கு ரூ.3 கோடியும், வெண்கல பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.2 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். நீச்சல் போட்டி பிரிவில் இந்தியா முதல் முறையாக பங்கேற்கிறது. இதில் கலந்து கொள்ளும் 3 பேர்களில் ஒருவர் கர்நாடகத்தை சேர்ந்தவர் என்பது நமக்கு பெருமை அளிக்கும் விஷயம் ஆகும்.

பல்வேறு சாதனைகள்

  ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் கர்நாடகத்தை சேர்ந்த 3 பேரும் தங்க பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.
  இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

  விளையாட்டுத்துறை மந்திரி நாராயணகவுடா பேசுகையில், "அதிதி அசோக் கோல்ப் விளையாட்டில் சர்வதேச அளவில் பதக்கங்களை பெற்றுள்ளார். அதே போல் மற்ற 2 வீரர்களும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். இவர்கள் 3 பேரும் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன். அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

  இந்த நிகழ்ச்சியில் கர்நாடக ஒலிம்பிக் சங்க தலைவர் கோவிந்தராஜ், விளையாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷாலினி ரஜனீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story