கொலை செய்யப்பட்ட கட்டிட காண்டிராக்டர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3-வது நாளாக போராட்டம்
நெல்லை அருகே கட்டிட காண்டிராக்டரை கொலை செய்தவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள வடக்கு தாழையூத்தைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் கண்ணன் (வயது 35). கட்டிட காண்டிராக்டரான இவர் கடந்த 12-ந்தேதி ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தாழையூத்து போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
தனிப்படை போலீசார் இந்த வழக்கு தொடர்பாக மர்ம கும்பல் வந்த மோட்டார் சைக்கிளின் எண், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் உள்ளிட்டவைகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிலர் போலீசில் சரண் அடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், போலீசார் வடக்கு வாகைகுளத்தை சேர்ந்த நல்லதுரை, சங்கிலி பூதத்தார், உதயராஜா, குரு சச்சின் ஆகிய 4 பேரை பிடித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் வைத்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் விசாரணையில், சிறையில் கைதிகளால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட முத்து மனோவின் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருப்பதாக தெரிய வருகிறது. இருந்தாலும் போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக கண்ணனின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், வடக்கு தாழையூத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலைக்கு காரணமான உண்மை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். அவரது குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த வழக்கை உடனே சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும். அதுவரை நாங்கள் உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.
மாைலயில் கண்ணனின் உறவினர்கள் கைகளில் கருப்புக்கொடி ஏந்தி சாலைமறியல் செய்வதற்காக புறப்பட்டனர். சாலைமறியலுக்கு முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், குற்றவாளிகள் அனைவரையும் விரைவில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். சுமார் 3 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. ஆனாலும் அதில் உடன்பாடு ஏற்படாததால், உறவினர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு தாழையூத்து பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story