நாமக்கல் அருகே, அதிகாரிகள் போல நடித்து 5½ பவுன் நகைகளை திருடிய 2 பேர் கைது


நாமக்கல் அருகே, அதிகாரிகள் போல நடித்து 5½ பவுன் நகைகளை திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 July 2021 6:12 AM IST (Updated: 15 July 2021 6:18 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே அதிகாரிகள் போல நடித்து, 5½ பவுன் நகைகளை திருடிச்சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள என்.புதுப்பட்டியை அடுத்த நல்லூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி மாதேஸ்வரி (51). இவர்கள் வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகின்றனர். கடந்த 6-ந் தேதி டிப்-டாப் நபர்கள் 2 பேர், இவர்களது மளிகை கடைக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த மாதேஸ்வரியிடம், தங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்ட அவர்கள், உங்களது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்து உள்ளது.
எனவே உங்களது வீட்டை சோதனை செய்ய வேண்டும் என கூறி உள்ளனர். 

இதையடுத்து வீட்டுக்குள் நுழைந்த நபர்கள் பீரோவை திறந்து காட்டும்படி மாதேஸ்வரியிடம் கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாதேஸ்வரி தனது கணவர் பழனிசாமியை அழைத்து வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார். சிறிது நேரத்தில் கணவருடன் மாதேஸ்வரி வீட்டுக்கு வந்தார்.

அப்போது அவர்களிடம் பழனிசாமி, நீங்கள் யார் ஏன் சோதனை செய்கிறீர்கள்? என கேட்டு உள்ளார். அப்போது அவர்கள் தற்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என கூறிவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று விட்டனர்.

பின்னர் உறவினரின் விஷேச நிகழ்ச்சிக்கு செல்ல மாதேஸ்வரி பீரோவில் உள்ள நகைகளை எடுக்க சென்று உள்ளார். அப்போது பீரோவில் இருந்த 5½ பவுன் நகைகள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாதேஸ்வரி நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து, அதிகாரிகள் போல நடித்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வந்தார். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் மாதேஸ்வரிடம் அதிகாரிகள் போல நடித்து நகைகளை திருடிச்சென்ற நபர்கள் பள்ளிபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி (55), மணிகண்டன் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து திருட்டு போன 5½ பவுன் நகைகளையும் மீட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story