கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் வாக்குவாதம்


கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 15 July 2021 6:58 AM IST (Updated: 15 July 2021 6:58 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி தடுப்பூசி செலுத்தும் முகாமில் பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


திருச்சி, 
திருச்சி தடுப்பூசி செலுத்தும் முகாமில் பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தடுப்பூசி முகாம்

கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். திருச்சி மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின்படி மாநகராட்சி சார்பில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவில்லை. 

இந்தநிலையில் நேற்று திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 6 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, அரியமங்கலம் எஸ்.ஐ.டி. தொழில்நுட்பக் கல்லூரி, கே.கே.நகர் உழவர் சந்தை எதிர்புறத்தில் உள்ள ஆர்சர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புத்தூர் வயலூர் ரோடு பிஷப் ஹீபர் கல்லூரி ஆகிய இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசியும், மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபம், டி.வி.எஸ். டோல்கேட் ஜமால் முகமது கல்லூரி ஆகிய 2 இடங்களில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

வாக்குவாதம்

இதில் கலையரங்கம் திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் காலை 9 மணிக்கு தொடங்கியது. 750 கோவேக்சின் தடுப்பூசிகள் மட்டும் உள்ளது என அறிவிப்பு வெளியான நிலையில், அதிகாலை முதலே ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெறும் திரளாக கூடினர். மேலும் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்றாமல் நெருக்கமாக நின்றதால் போலீசார் அவர்களை எச்சரித்தனர். இதற்கிடையில் 2-வது டோஸ் செலுத்திக்கொள்ள வந்த பொதுமக்கள் வரிசையில் நிற்காமல் முன்னால் சென்றதால் வரிசையில் காத்திருந்தவர்கள் அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு வந்திருந்த பொதுமக்கள் சுகாதார பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தடுப்பூசி சிறிது நேரம் செலுத்துவது நிறுத்தப்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் சக்கிவேல், கண்டோன்மெண்ட் உதவி கமிஷனர் அஜய் தங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் சமாதானம் அடைந்தனர். போலீசார் ஒலிபெருக்கி மூலம் அவர்களை வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து தடுப்பூசி முகாமிற்கு காத்திருக்கும் பொதுமக்களை தவிர தொடர்ந்து வருபவர்கள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

முசிறி, தா.பேட்டை

முசிறி, தா.பேட்டை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 229 நபர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

இதேபோன்று முசிறி, தா.பேட்டை பகுதியில் 192 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று ஒரே நாளில் 8 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அப்பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளித்து சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுற்றுலா வழிகாட்டிகளுக்கு தடுப்பூசி

திருச்சி மாவட்டத்தில் சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பயனடையும் வகையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் திருச்சி ஓட்டல் தமிழ்நாடு வளாக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. 

விடுதி அலுவலர்கள், பணியாளர்கள், பயண முகவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், கார் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சுகாதாரத் துறை மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து சிறப்பு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தியது. இதில் 245 பேர் கலந்து கொண்டனர். இந்த தடுப்பூசி முகாமை சுற்றுலா பணியாளர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டு பயன் அடைந்தனர்.

Next Story