திருச்சி அருகே அதிரடி: அரிசி ஆலையில் 7¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


திருச்சி அருகே அதிரடி: அரிசி ஆலையில் 7¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 15 July 2021 7:49 AM IST (Updated: 15 July 2021 7:49 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே அரிசி ஆலையில் 7¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி,
திருச்சி அருகே அரிசி ஆலையில் 7¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ரகசிய தகவல்

திருச்சி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். தீவிர கண்காணிப்பு மற்றும் தகவலின் அடிப்படையில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தடுக்கப்பட்டு வருகிறது.

லால்குடியில் தனபால் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலையில் ஐ.ஆர்- 72 அரிசியுடன் ரேஷன் அரிசி கலப்படம் செய்து மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த ஒருவர் விற்பனை செய்வதாக மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்தது.
7¼ டன் ரேஷன் அரிசி சிக்கியது

அதன்பேரில் நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அலாவுதீன், செல்வராசு மற்றும் ஏட்டுகள் ராமலிங்கம், கோபால், எட்வின், கார்த்திக் ஆகியோர் கொண்ட குழுவினர் குறிப்பிட்ட ஆலைக்கு விரைந்து சென்றனர். 

அப்போது அங்கு மூட்டைக்கு 40 கிலோ வீதம் 183 மூட்டைகளில் 7,320 கிலோ (7¼ டன்) ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது.பின்னர் ரேஷன் அரிசி மூட்டைகளை ஆலைக்கு கொண்டு வந்த மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம் விஜயாநகரை சேர்ந்த கணபதி (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்தனர். 
மேலும் ரேஷன் அரிசி மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
கலப்படம் செய்து விற்பனை

போலீசார் விசாரணையில், அரிசி ஆலை உரிமையாளர் தனபாலனுடன் 7 ஆண்டுகள் ஒப்பந்தம் ஒன்றை கணபதி ஏற்படுத்தி கொண்டுள்ளார். அதாவது, ஆலையில் நெல்லை அரவைக்கு கொடுத்து அரிசியை வாங்குவது ஆகும். ஒப்பந்த காலம் 5½ ஆண்டுகள் முடிந்து விட்டன. தற்போது கொரோனா காலம் என்பதால் போதிய வருவாய் இல்லாமல் கணபதி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆங்காங்கே ரேஷன் அரிசியை வாங்கி சேகரித்து அவற்றுடன் நயம் அரிசியை கலப்படம் செய்து திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரிசோதனை அடிப்படையில் விற்பனை செய்துள்ளார். ஆனால், ரேஷன் அரிசி கலப்படத்தை வியாபாரிகள் யாரும் கண்டுபிடிக்கவில்லை என தெரியவந்தது. தற்போது மீண்டும் கலப்படம் செய்து விற்பனைக்கு தயாரான நேரத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் கணபதி போலீஸ் கையில் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.

சிறையில் அடைப்பு

பின்னர் திருச்சி ஜே.எம்.4 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு குமார் முன்னிலையில் கண்பதி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து கணபதி துறையூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story