திருத்தணி அருகே விபத்து: டெம்போ வேன் மோதி மூதாட்டி பலி பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்
திருத்தணி அருகே 100 நாள் வேலைக்கு சென்ற மூதாட்டி மீது டெம்போ வேன் மோதி பலியானார். அப்பகுதியில் வேகத்தடை அமைக்க கோரி உறவினர்கள் பிணத்துடன் சாலை மறியல் செய்தனர்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பொன்பாடி காலனியில் வசித்து வருபவர் இந்திராணி (வயது 65). இவர் நேற்று காலை 100 நாள் திட்டத்தில் வேலை செய்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் அவர், ஊருக்கு வெளியே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை அவர் கடந்து செல்லும் போது, ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து அதிவேகமாக வந்த டெம்போ வேன் ஒன்று மூதாட்டி மீது பயங்கரமாக மோதியது.
இதில் இந்திராணி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் இந்திராணியின் உறவினர்கள் ஆத்திரமடைந்து திரண்டு வந்து அவரது உடலை சாலையில் வைத்து மறியல் செய்தனர்.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி போலீசாரிடம் சம்பவம் நடந்த இடத்தில் வேகத்தடை அமைக்காததால் அடிக்கடி விபத்து நடப்பதாக கூறி அங்கு விரைவில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டனர்.
மேலும், இறந்த இந்திராணியின் குடும்பத்திற்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையை உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
அதன்பின்னர், இந்திராணியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து, விபத்துக்கு காரணமான ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த வேன் டிரைவர் தனஞ்செழியன் (26) என்பவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய திருத்தணி தாசில்தார் ஜெயராணியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனுவையும் வழங்கினர். இந்த சாலை மறியலால் 2 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story