சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் தினசரி 5 டன் வரை தயாரிக்க முடியும்
3-வது அலையை சமாளிக்க சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினசரி ஆஸ்பத்திரிகளில் 5 டன் வரை ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர். பலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டும் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தனர். இந்த நிலையில் கொரோனா 3-வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு, ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.
அதன்படி பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி வருகின்றனர். மேலும், ஆஸ்பத்திரி வளாகத்திலும், பல்வேறு நிறுவனங்களில், சமூக பொறுப்பு நிதி மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதி பங்களிப்புடன் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி, ராஜிவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் 3-வது அலையை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல் 3-வது அலை வந்தால், அதனை சமாளிக்கவும் தயராக உள்ளது. அதன்படி மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை ராஜிவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியை பொருத்தவரையில் தினசரி சராசரியாக 8 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.
அங்கு தினசரி 5 டன் உற்பத்தியாகும் வகையில் 2 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலமாக அங்கு ஆக்சிஜன் தேவை, ஆஸ்பத்திரி வளாகத்திலேயே பூர்த்தி செய்யப்படும். இந்த கட்டமைப்புக்கு பராமரிப்பு செலவு மற்றும் மின்சார செலவு அதிகரிக்கும். ஆனால் உரிய நேரத்தில் ஆக்சிஜன் கிடைத்து பல உயிர்களை காப்பாற்ற முடியும். மேலும் 3-வது அலைக்கு தேவையான ஆக்சிஜன் உற்பத்தியை பெற முடியும்.
அந்தவகையில் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 3 உற்பத்தி மையங்களில் 5 டன் ஆக்சிஜனும், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 3 உற்பத்தி மையங்களில் 5.2 டன் ஆக்சிஜனும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 3 உற்பத்தி மையங்களில் 4.8 டன் ஆக்சிஜனும், ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு உற்பத்தி மையத்தில் 1 டன் ஆக்சிஜனும், கிண்டி கிங் ஆஸ்பத்திரில் ஒரு உற்பத்தி மையத்தில் 1 டன் ஆக்சிஜனும் தினசரி உற்பத்தி செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story