மீனவர்களை பழிவாங்கும் அம்சங்கள் உள்ள மத்திய அரசின் புதிய மீன்பிடி மசோதாவை எதிர்க்கிறோம் கனிமொழி எம்.பி. பேட்டி
மீனவர்களை பழிவாங்கும் அம்சங்கள் உள்ள மத்திய அரசின் புதிய மீன்பிடி மசோதாவை எதிர்க்கிறோம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
தூத்துக்குடி:
மீனவர்களை பழிவாங்கும் அம்சங்கள் உள்ள மத்திய அரசின் புதிய மீன்பிடி மசோதாவை எதிர்க்கிறோம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
மனு
தென்தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் நிர்வாகிகள் நேற்று மாலையில் தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி எம்.பி.யை சந்தித்தனர். அப்போது, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். கோரிக்கைகளை முதல்-அமைச்சரிடம் எடுத்துக்கூறி தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
குடியுரிமை
பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மற்றும் சுற்றி உள்ள மாவட்டங்களை சேர்ந்த இலங்கை அகதிகள் முகாம் நிர்வாகிகள் சந்தித்தனர். முகாமில், அவர்கள் தினமும் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கோரிக்கை மனுவை, முதல்-அமைச்சரிடம் கொடுப்பதற்காக என்னை சந்தித்து உள்ளார்கள். இவர்களது கோரிக்கையை முதல்-அமைச்சரிடம் தருவேன். கடந்த முறை தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களை சந்தித்தேன். அவர்களது கோரிக்கையை முதல்-அமைச்சரிடம் தெரிவித்து உள்ளேன். அவர் நிச்சயமாக கனிவோடு பரிசீலிப்பதாகவும், நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்து உள்ளார்.
அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள், அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்திக் கொள்வதற்கான கோரிக்கைகளை வழங்கி உள்ளனர். அவர்களுக்கான குடியுரிமையை தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தும். சிலர் சொந்த நாட்டுக்கு செல்ல விருப்பப்படுகின்றனர். அதனையும் பரிசீலிக்கிறோம்.
புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு
புதிய மீன்பிடி மசோதா ஆலோசனை கூட்டத்தில் கருத்துக்களை கடிதம் மூலம் அமைச்சரிடம் தெரிவித்து உள்ளேன். அதில் பல மாற்று கருத்துக்கள் உள்ளன. மத்திய அரசு ஒவ்வொரு மசோதா கொண்டு வரும் போதும், மாநில உரிமைகளை தட்டிப் பறிப்பதை முக்கியமான விஷயமாக வைத்து இருக்கிறார்கள். அதனை எதிர்த்து இருக்கிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அரசுக்குதான், அந்தந்த பகுதியில் உள்ள பிரச்சினைகள் தெரியும். ஆகையால் மாநிலத்துக்கு உரிமைகளை விட்டுத்தர வேண்டும். மிகவும் கடுமையான தண்டனைகள் அந்த சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது. அதனை எதிர்க்கிறோம். மீனவர்களை பழிவாங்கும் நிலைக்கு கொண்டு செல்லுமே தவிர, பிரச்சினைகளுக்கு தீர்வாகாது.
இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.
Related Tags :
Next Story