4 கடைகளுக்கு அபராதம்
திருப்பூர் மாவட்டத்தில் 89 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் விதி மீறிய 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர், ஜூலை.16-
திருப்பூர் மாவட்டத்தில் 89 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் விதி மீறிய 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பயிற்சி வகுப்பு
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் இந்திய அரசின் உணவு பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெற்ற பரிக்சன் அமைப்புடன் இணைந்து இணைய வழி மூலமாக ஓட்டல்கள், உணவுகள், பேக்கரி மற்றும் மளிகை கடைகளில் உணவுப் பொருட்கள் கையாளும் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கோவில்களில் அன்னதானம் வழங்கும் கோவில்களுக்கு உணவு பாதுகாப்பு துறையிடம் இருந்து சான்று பெற வேண்டும். அன்னதானம் மற்றும் கடவுளுக்கு படைக்கும் பிரசாதம் வரை உணவின் தரம் உறுதிப்படுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில் பொறுப்பு அலுவலர்களுக்கு இணைய வழி மூலமாக உணவு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
89 கடைகளில் ஆய்வு
மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களில் 89 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. உணவு பாதுகாப்பு விதிகளை மீறிய 7 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களான குட்கா, பான்மசாலா இரண்டு கடைகளில் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் இரண்டு கடைகளில் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அந்த கடைகளுக்கு தலா ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
பயோடீசல் தயாரிப்பு
எண்ணெய் பயன்படுத்தி உணவு பொருட்களை தயார் செய்யும் தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்களிடம் சேகரமாகும் கழிவு எண்ணையை உணவு பாதுகாப்பு மறுசுழற்சி திட்டத்தில் அனைவரும் இணைந்து பயோடீசல் தயாரிப்பதற்கு பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
கலப்பட உணவு சம்பந்தப்பட்ட புகார்களை 94440 42322 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story