கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை


கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை
x
தினத்தந்தி 15 July 2021 10:18 PM IST (Updated: 15 July 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக லால்பேட்டையில் 37 மில்லி மீட்டர் மழை பதிவானது.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் வெயில் அடித்து வரும் நிலையில், மாலையில் மழை பெய்து வருகிறது. இதனால் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

பொதுமக்கள் அவதி

அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் திடீரென குளிர்ந்த காற்று வீசியது. சற்று நேரத்தில் பலத்த மழை பெய்தது. சுமார் 30 நிமிடம் நீடித்தது. அதன்பிறகு மழை இல்லை. பின்னர் இரவு வரை லேசான சாரல் மழையாக பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. தாழ்வான குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி நின்றதை பார்க்க முடிந்தது.

கடலூர் நகராட்சி பகுதியில் பல இடங்களில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தால், வடிகாலில் தண்ணீர் ஓடாமல் சாலைகளில் தண்ணீர் ஓடியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதேபோல் லால்பேட்டை, சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, பண்ருட்டி, விருத்தாசலம் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

மழை அளவு

இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக லால்பேட்டையில் 37 மில்லி மீட்டர் மழை பதிவானது. குறைந்த பட்சமாக விருத்தாசலத்தில் 1 மில்லி மீட்டர் மழை பதிவானது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில்  வருமாறு:-
பெலாந்துறை- 35.2, சிதம்பரம் -28.8, காட்டுமன்னார்கோவில் -27, ஸ்ரீமுஷ்ணம் -20.2, அண்ணாமலைநகர் 16.3, தொழுதூர் -13, கடலூர் -10.5, கலெக்டர் அலுவலகம் -9.4, வானமாதேவி, புவனகிரி தலா -7, கீழசெறுவாய் -4, பண்ருட்டி -3.3, கொத்தவாச்சேரி -3, குடிதாங்கி -2.

Next Story