விழுப்புரத்தில் துணிகரம்: தலைமை தபால் நிலையத்தில் ரூ.2 லட்சம் அபேஸ் 3 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் ரூ.2 லட்சத்தை அபேஸ் செய்து சென்ற 3 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
தலைமை தபால் நிலையம்
விழுப்புரம் காமராஜர் சாலையில் தலைமை தபால் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தினந்தோறும் பல்வேறு சேமிப்பு கணக்குகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வசூல் செய்யப்படும் தொகை, தபால் நிலையத்தில் செயல்படும் அஞ்சலக கருவூல அலுவலகத்தின் மூலமாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
இந்நிலையில் நேற்று மாலை 6.15 மணியளவில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் 3 பேர் தபால் நிலையத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவரிடம், மணியார்டர் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு அந்த ஊழியர் தற்போது மணியார்டர் அனுப்பும் நேரம் முடிந்துவிட்டதால் நாளை(அதாவது இன்று) வரும்படி கூறியுள்ளார். அப்படியானால் 2 ஆயிரம் ரூபாய்க்கு 100 ரூபாய் நோட்டுகளாக சில்லரை தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு அந்த ஊழியர், தன்னிடம் சில்லரை இல்லை என்றும் தபால் நிலையத்தில் உள்ள அஞ்சலக கருவூல அறைக்கு சென்று வாங்கிக்கொள்ளும்படி கூறினார்.
சில்லரை தரும்படி கேட்டு நடித்து...
-
அதன்படி கருவூல அறைக்கு அவர்கள் 3 பேரும் சென்றனர். அங்கு ஏற்கனவே வசூலான பணத்தை மேஜை மீது வைத்தபடி கருவூல அலுவலர் சரிபார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் அந்த வாலிபர்களில் ஒருவர், சில்லரை தரும்படி கேட்பதுபோல் அவரது கவனத்தை திசை திருப்பி கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அங்கிருந்த மேஜையில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் கட்டு ஒன்றை அபேஸ் செய்துகொண்டு வெளியே வந்தனர்.
பின்னர் அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றில் அவர்கள் 3 பேரும் ஏறி பழைய பஸ் நிலையம் சென்று அங்கு ஏற்கனவே தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரில் ஏறி தப்பிச்சென்று விட்டனர். இதனிடையே தபால் நிலைய ஊழியர்கள் வெளியே ஓடி வந்து அந்த வாலிபர்களை தேடினர். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. அந்த பணக்கட்டில் மொத்தம் ரூ.2 லட்சம் இருந்தது.
3 பேருக்கு வலைவீச்சு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார், தபால் நிலையத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
மேலும் காமராஜர் வீதி மற்றும் பழைய பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்ததில், தபால் நிலையத்தில் பணத்தை அபேஸ் செய்து சென்ற 3 பேரும் வடமாநிலத்தவர்கள் போன்று இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு தப்பி ஓடிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
தலைமை தபால் நிலையத்தில் பணம் அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story