கடலூர் மாவட்டத்தில் 3 கைதிகள் உள்பட 86 பேருக்கு கொரோனா
கடலூர் மாவட்டத்தில் 3 கைதிகள் உள்பட 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. உயிரிழப்பு எதுவும் இல்லை.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 59 ஆயிரத்து 180 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியது. இவர்களில் சென்னை, மதுரையில் இருந்து கடலூர், குமராட்சி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி வந்த 5 பேருக்கும், அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த குமராட்சி, நல்லூரை சேர்ந்த 2 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
இது தவிர சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 17 பேருக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 62 பேருக்கும் பாதிப்பு உறுதியாகியது.
கைதிகளுக்கு பாதிப்பு
இதில் கடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்ட 3 கைதிகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. இவர்கள் 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் வரை 57 ஆயிரத்து 469 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 91 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உயிரிழப்பு இல்லை
நேற்று முன்தினம் வரை வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நமது மாவட்டத்தில் உயிரிழந்து, அந்தந்த மாவட்டங்களில் உள்ள புள்ளிவிவர பட்டியலில் சேர்த்தது போக கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 793 பேர் உயிரிழந்து உள்ளனர். நேற்று உயிரிழப்பு எதுவும் இல்லை.
இருப்பினும் கொரோனா பாதித்த 818 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 95 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதி 33 ஆக இருந்தது.
Related Tags :
Next Story