தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஆனந்த நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா- பழங்கள்-நறுமண பொருட்களால் சாமிக்கு சிறப்பு அபிஷேகம்


தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஆனந்த நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா- பழங்கள்-நறுமண பொருட்களால் சாமிக்கு சிறப்பு அபிஷேகம்
x
தினத்தந்தி 15 July 2021 10:40 PM IST (Updated: 15 July 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஆனந்த நடராஜர் கோவிலில் நடைபெற்ற ஆனி திருமஞ்சன விழாவில் சாமிக்கு பல்வேறு வகையான பழங்கள் மற்றும் நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தர்மபுரி:
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஆனந்த நடராஜர் கோவிலில் நடைபெற்ற ஆனி திருமஞ்சன விழாவில் சாமிக்கு பல்வேறு வகையான பழங்கள் மற்றும் நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ஆனி திருமஞ்சன விழா
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள சிவகாமசுந்தரி உடனுறை ஆனந்த நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி மாணிக்கவாசகர் குருபூஜை, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியும் பின்னர் மாணிக்கவாசகர் உற்சவமும் நடைபெற்றது. 
இதைத்தொடர்ந்து திருநெறிய தெய்வத்தமிழ் வழிபாட்டு சபையினரால் திருமுறை மற்றும் திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் நால்வர் உற்சவமும், அபிஷேக பொருட்கள் வரிசை அழைப்பும் நடைபெற்றது.
108 சங்காபிஷேகம்
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை சிவகாமசுந்தரி உடனுறை ஆனந்த நடராஜருக்கு 108 சங்காபிஷேகம், கலச அபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சாமிக்கு பல்வேறு வகையான பழங்கள் மற்றும் பால், தயிர், சந்தனம், விபூதி, நெய் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 
பின்னர் ஆனி திருமஞ்சன தரிசனமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இரவு திரு ஆபரண அலங்கார காட்சியுடன் கோபுர தரிசனமும், அம்மையப்பன் திருநடன உற்சவமும் நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆனி திருமஞ்சன விழா குழு அறக்கட்டளை குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்திருந்தனர்.
கோட்டை கோவில்
இதேபோன்று தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனுறை மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் நடைபெற்ற ஆனி திருமஞ்சன விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. கோவில் வளாகத்தில் சாமி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி நெசவாளர் நகர் மங்களாம்பிகை உடனுறை மகாலிங்கேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதேபோல் தர்மபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனுறை மருதவானேஸ்வரர் கோவில், சவுலுப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோவில் உள்பட நகரில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் ஆனி திருமஞ்சன விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Next Story